தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், வரவிருக்கும் 2026-2027 பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 நிதி உதவி வழங்கும் திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் புதிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் (மாதம் ரூ.1,000) பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதை அமல்படுத்திய திமுக அரசின் முயற்சியைத் தொடர்ந்து, பல மாநில அரசுகள் இத்தகைய திட்டங்களை விரிவுபடுத்தி வருகின்றன. சில மாநிலங்கள் ரூ.1,000 முதல் ரூ.2,500 வரை உதவித் தொகை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட விஜய், பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள அவரது அரசின் முதல் பட்ஜெட் என்பதால், இந்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றும் வகையில் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் தொடர்பான முக்கிய திட்டங்கள், தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள், புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை விரிவாகப் பேசப்பட்டன. அடுத்த மாதம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவிருக்கும் இந்த பட்ஜெட்டில், தவெகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல முக்கிய வாக்குறுதிகள் இடம் பெறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள், திருமண உதவியாக ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, மாணவர்களுக்கு 20 லட்சம் வரை கல்விக் கடன், குடும்பத் தலைவிகளுக்கு 25 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு, ஆண்டுதோறும் இலவச உடல் பரிசோதனை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை போன்ற திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்திட்டங்களுக்கான செலவினங்கள், செயல்படுத்தும் கால அட்டவணை, பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட நடைமுறை விவகாரங்கள் குறித்தும் ஆழமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் அரசின் இந்த முதல் பட்ஜெட், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
