சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள குன்ஷான் நகரில் உணவு டெலிவரி ஊழியராகப் பணியாற்றும் 56 வயதான வாங் ஜிபிங் (Wang Jibing), சீன இலக்கிய உலகின் மிக உயர்ந்த அங்கீகாரங்களில் ஒன்றான லு சூன் இலக்கியப் பரிசை (9வது பதிப்பு) கவிதைப் பிரிவில் பெற்றுள்ளார். நவீன சீன இலக்கியத்தின் தந்தை எனப் போற்றப்படும் லு சூனின் பெயரால் வழங்கப்படும் இந்த விருது, அவரது ‘லோ பிளைட்’ (Low Flight) என்ற கவிதைத் தொகுப்புக்காக வழங்கப்பட்டுள்ளது.
1969ஆம் ஆண்டு பிறந்த வாங் ஜிபிங், இளம் வயதிலேயே குடும்பப் பொருளாதார நெருக்கடி காரணமாக பள்ளிப் படிப்பை இடைநிறுத்தினார். கட்டுமானத் தொழில், தெருவோர வியாபாரம், குப்பை சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு உழைப்பு வேலைகளைச் செய்து வாழ்க்கையை நடத்தினார். 2019ஆம் ஆண்டு சுமார் 50 வயதில் உணவு டெலிவரி ஊழியராக மாறினார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் தனது ஸ்கூட்டரில் 1,50,000 கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்துள்ளார். பகல் நேர டெலிவரி வேலைக்கிடையே, உணவு காத்திருக்கும் நேரங்கள், லிஃப்ட் காத்திருப்பு, வாடிக்கையாளர் வீடுகளுக்கு இடையிலான இடைவெளிகளில் சிறு காகிதத் துண்டுகளில் கவிதைகளை எழுதியுள்ளார்.
இவரது ‘லோ பிளைட்’ தொகுப்பு, உணவு டெலிவரி ஊழியர்களின் அன்றாடப் போராட்டங்கள், அல்ஃபோரிதம்-கட்டுப்பாட்டு வாழ்க்கை, விரக்தி, நம்பிக்கை மற்றும் மனித மாண்பு ஆகியவற்றை யதார்த்தமாகப் பிரதிபலிக்கிறது. இந்நூலை எழுதுவதற்காக சுமார் 140க்கும் மேற்பட்ட டெலிவரி ஊழியர்களுடன் நேரடி உரையாடல்களையும், 60க்கும் மேற்பட்டவர்களிடம் கருத்துக் கணிப்புகளையும் மேற்கொண்டார். இதுவரை 6,000க்கும் அதிகமான கவிதைகளைப் படைத்துள்ள இவர், 1988ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எழுதி வருபவர். சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அவரது படைப்புகள் வைரலான பின்னர் பரவலான கவனத்தைப் பெற்றன.
இந்த வெற்றி, சீனாவில் சாதாரண தொழிலாளர்களின் இலக்கியப் படைப்புகளுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் என்று கருதப்படுகிறது. விருது பெற்ற பின்னரும் வாங் ஜிபிங் தனது டெலிவரி வேலையைத் தொடர்வதாகவும், “நான் மனித வாழ்க்கையின் அடித்தளத்தில் இருந்து பறக்க விரும்புகிறேன்” என்றும் கூறியுள்ளார். அவரது படைப்புகள், கடின உழைப்பாளர்களின் குரலுக்கு இலக்கிய உலகில் முக்கியத்துவம் அளிப்பதை உறுதிப்படுத்துகின்றன.
