பதின்மவயதில் இயல்பாக தோன்றும் காதல். அதை எதிர்க்கும் ஆதிக்கசாதி மனநிலை கொண்ட பெண்ணின் மாமா. இது தான் தெலுங்கு நடிகர் நானி தயாரிப்பில் வெளி வந்திருக்கும் “கோர்ட்” படத்தின் ‘ஒன் லைன்”
இயல்பாகவே பதின்ம காதலில் முதலில் பெண் தான் காதலுக்கு அச்சாரமாக இருக்கிறாள். குறிப்பாக வசதி வாய்ப்புகளோடு வளரும் இளம்பெண், எதிர்பாலினத்தின் மீதான கவர்ச்சியை நாடுவது இயல்பு. இத்தகைய சூழலில் ஆணைக் காட்டிலும் அந்த காதலுக்கு பெண்ணே தூண்டுக்கோலாகிறாள். ஆனால் எதிர்பாராத ஒரு சிக்கலில் ஆண் அதற்கு பலியாகிறான்.
தமிழில் ” காதல்” படம் சிறந்த உதாரணம். ஒர் நெருக்கடியில் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி சென்னை தெருக்களில் தஞ்சமடைய, அதற்கு பின் நடப்பவைகள் எல்லாம் தமிழ் சினிமா பார்த்திராத அதிர்ச்சியூட்டும் பக்கம். ஆனால் காதல் திரைப்படம் சாதியை அதன் ஆதிக்கத்தை வெளிப்படையாக முன் வைக்கமால், அதன் அடிநாதத்தை மட்டும் தொட்டு இருக்கும். அப்போதைய சூழல் இயக்குநருக்கு அது மட்டுமே சாத்தியம் என்று சொல்லலாம்.
ஆனால் மராத்தியில் வெளியான சாய்ராட் திரைபடம், சாதியின் கோர முகத்தை அது சமூகத்தில் ஏற்படுத்தி இருக்கும் பயத்தை நமக்கு அப்பட்டமாக காட்டியிருக்கும். இயக்குநர் நாகராஜ் மஞ்சுளா, இன்றைய பா.ரஞ்சித் , மாரி செல்வராஜுக்கு முன்னோடி என சொல்லலாம்.
” கோர்ட்”திரைப்படம் இந்த பதின்ம காதலை போக்சோ சட்டம் மூலம், அதன் சிக்கலை பேசுகிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் வில்லனாக காட்டும் தெலுங்கு நடிகர் சிவாஜி மட்டும் மொத்த சிக்கலுக்கும் காரணம் ஆகிறார். வெறும் ஆணாதிக்க மனநிலையில் தான் இதை அணுகுகிறார். அதைத்தாண்டி வேறொன்றுமில்லை. அவர் பின்புலமும் சரியாக சொல்லபடவில்லை. ஒருவேளை பவர் ஸ்டார் காரணகர்த்தாவாக கூட இருக்கலாம்.. யாமறியேன் பராபரமே!!!
சிறார் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் நோக்கத்துடன் இயற்பட்டது போக்ஸோ சட்டம். அதே நேரத்தில், சம வயது உள்ள பதின்மர்கள் காதலில் இணையும் போது இந்த சட்டம் அவர்களை எப்படி எதிர்கொள்கிறது என்ற அடிப்படையில் மட்டும் இதை புரிந்துக்கொள்ள முடியுமே தவிர, வேறு ஒன்றுமில்லை.வில்லனுக்கு நோக்கம் ஒன்று தான் பெண்கள் அடக்க ஒடுக்கமா இருக்கனும் 8 வயசு பெண் பிள்ளையென்றாலும் இழுத்திபோத்திட்டு தான் இருக்கனும். இது மட்டுமே அவருக்கு உரித்தான தர்மம்.
அதைத்தாண்டி இயக்குநர் ராம் ஜெகதீஷ் பேசவில்லை அல்லது பேசமுற்படவில்லை. காதலர்களின் குடும்ப பின்னணி வழக்கம் போல் ஒரு தெலுங்கு சினிமா ஃபார்முலாவில் இருப்பாதால் மேற்கொண்டு இதை பேச ஒன்றுமில்லை. கோர்ட் சார்ந்த திரைப்படங்கள் தமிழில் “விதி” காலம் தொட்டு “ஜெய்பீம்” வரை பார்த்து உள்ளதால் இது அவ்வளவாக எடுபடவில்லை.
நல்ல முயற்சி என்ற வகையில் ஓகே தான். ஆனால் நம் சட்டங்கள் எல்லாம் பாதிக்கபட்டவர்கள் நலம் சார்ந்தே இயற்றப்பட்டு உள்ளது. சிக்கல் அதை நடைமுறை படுத்தும் அதிகாரிகள் கையில் உள்ளது.
நாயகன் “ப்ரியதர்ஷி புலிக்கொண்ட ” (யாம்மாடியோவ் பேரே டெர்ரா இருக்கு) நீதிபதியிடம் ” இந்த பையனை குற்றாவளின்னு நிரூபிக்க இவங்க செய்த செலவு அதிகபட்சம் ரெண்டு லட்சத்துக்குள்ள தான் இருக்கும் .ஆனா அது மூலம் இந்த பையனுக்கு தண்டனை கிடைத்திருந்தால் 14 வருஷம் ..அவன் வாழ்க்கையே நிர்மூலம் ஆகியிருக்கும்” ! .
உண்மை தான்.
இந்தியாவில் பல அப்பாவிகள் இப்படி தான் சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ..
Vijis Palanichamy