எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறினால் அதற்கான பதிலடி மிகவும் பேரழிவு தரக்கூடியதாகவும், வலுவானதாகவும் இருக்கும் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை துவங்கி பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்தியாவின் தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது.
இதனால் போர் பதற்றம் ஏற்பட்டநிலையில், முக்கிய திருப்பமாக, இந்தியா- பாகிஸ்தான் இடையே சனிக்கிழமை மாலை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறினால் அதற்கான பதிலடி மிகவும் பேரழிவு தரக்கூடியதாகவும், வலுவானதாகவும் இருக்கும் என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்சிடம் பேசிய பிரதமர் மோடி இதனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போர் நிறுத்தம் ஏற்பட்ட இரவு 26 இடங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். காஷ்மீர் குறித்து இந்தியாவுக்கு மிகத் தெளிவான நிலைப்பாடு உள்ளது என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைத் திரும்ப பெறுவது மட்டுமே மீதமுள்ள ஒரே ஒரு விஷயம் என்பதை தவிர பேசுவதற்கு வேறு எதுவும் இல்லை என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதிகளை ஒப்படைப்பது பற்றி பாகிஸ்தான் பேசினால் மட்டுமே பேசலாமே தவிர, வேறு எந்த பேச்சுவார்தையும் நடத்தும் நோக்கம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, எந்த நாடும் மத்தியஸ்தம் செய்வதை விரும்பவில்லை என்றும் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவையில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.