அருணாசல பிரதேசத்தில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்றுவதன் மூலம் நிலைமையை மாற்ற முடியாது என மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் தொடர்ந்து வரும் இத்தகைய முயற்சிகள் மீது இந்தியா உறுதியான பதிலை வழங்கியுள்ளது.
சீனா கடந்த சில ஆண்டுகளாக அருணாசல பிரதேசத்தை “ஜாங்னான்” என அழைத்து, அங்கு உள்ள இடங்களுக்கு சீன மொழியில் பெயர் சூட்டுகிறது. கடந்த ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்த சீனா, தற்போது மீண்டும் அதே போக்கை தொடரும் சூழலில் உள்ளது.
இதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:
“அருணாசலப் பிரதேசம் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதியாக இருந்தும் தொடரும். பெயரை மாற்றும் வெறுக்கத்தக்க முயற்சிகள் யதார்த்தத்தை மாற்ற முடியாது. இவை சாத்தியமற்ற மற்றும் அர்த்தமற்ற நடவடிக்கைகள் என்பதையும், இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது” என கூறினார்.
இதையும் படிக்க: பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில்கள் ரத்து – தெற்கு ரெயில்வே அறிவிப்பு!
இந்தியா மற்றும் சீனாவுக்கிடையில் எல்லை பிரச்சினை மீண்டும் தீவிரமாவதை தொடர்ந்து, பெயர் மாற்றம் போன்ற செயல் மூலமாக சீனா அழுத்தம் காட்ட முயல்வதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தியாவின் நிலைதான் தெளிவானது – அருணாசல பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தமானது.