மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 6,000-க்கும் அதிகமான பணியாளர்களை உடனடி பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
உலக டெக் நிறுவனங்கள் பல தங்கள் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் 6,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. உலகெங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு 2.28 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 3 சதவீதம் பேரை நிறுவனம் தற்போது பணி நீக்கியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் மட்டும் 1.26 லட்சம் பணியாளர்களும், இந்தியாவில் கிட்டத்தட்ட 20,000 பணியாளர்களும் உள்ளனர். கடந்தாண்டு 10,000 ஊழியர்களை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்த நிலையில், இந்தாண்டு மீண்டும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடந்த 2024-2024-ம் கடைசி காலாண்டில், அதாவது இந்தாண்டு ஜனவரி தொடங்கி மார்ச் வரை இந்நிறுவனத்தின் லாபம் எதிர்பார்ப்புகளை விட அதிகம் இருந்துள்ளது.
70.1 பில்லியன் டாலர் வருவாயையும், 25.8 பில்லியன் டாலர் நிகர வருமானத்தையும் பெற்றிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. லாபம் எதிர்பார்த்தை விட அதிகம் இருந்த போதிலும் எதற்காக இந்த பணிநீக்கம் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள மைக்ரோசாப்ஃட், செயற்கை நுண்ணறிவில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டியுள்ளதால், பணிநீக்கம் செய்வதாக கூறியுள்ளது.
கொரோனா காலகட்டத்தில் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் யுக்திகளை மாற்றியமைத்துடன் ஏராளமானோரை பணியில் அமர்த்தியது. அப்படி பணியமர்த்தியவர்களை வீட்டை விட்டு அனுப்பும் நடவடிக்கையை நிறுவனங்கள் மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். மைக்ரோசாஃப்ட்டில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மென்பொருள் பொறியியல் அல்லது தயாரிப்பு மேலாண்மைப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.