கர்நாடகாவின் பிரசித்தி பெற்ற குக்கே சுப்ரமண்யர் கோயிலின் நிர்வாக வாரிய தலைவராக முன்னாள் ரவுடி நியமிக்கப்பட்டுள்ளது, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டத்தில் உள்ளது குக்கே சுப்ரமணியர் கோயில். வரலாற்று சிறப்புமிக்க புண்ணிய தலமான இங்கு, உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு பயணிகளும் கோயிலுக்கு வருகை தருவர். குறிப்பாக தோஷ நிவர்த்திக்கு இக்கோயில் சிறப்பு பெற்றது. கர்நாடகாவில் அதிக வருவாய் கிடைக்கும் கோயில்களின் பட்டியலில், குக்கே சுப்ரமணியர் கோயில் முதலிடத்தில் உள்ளது.
இத்தகைய பெருமை வாய்ந்த கோயிலின் நிர்வாக வாரிய தலைவர் பதவிக்கு முன்னாள் ரவுடி ஹரிஷ் இஞ்சாடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை இந்த பதவிக்கு சிபாரிசு செய்தது சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் என தகவல் வெளியாகியுள்ளது. ஹரிஷ் இஞ்சாடி என்பவர் அடிக்கடி சிறைக்கு சென்று வந்துள்ள முன்னாள் ரவுடி. போலி காசோலை கொடுத்து பழங்கள், தேங்காய் விற்பனை டெண்டர் எடுத்து கோயில் நிர்வாகத்தை ஏமாற்றியதாக இவர் மீது குற்றச்சாட்டும் உள்ளது. இந்த வழக்கில் ஹரிஷ் கைதாகியும் உள்ளார்.
அது மட்டுமின்றி, மணல் மாபியா மற்றும் மரக்கடத்தலில், இவருக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டும் உள்ளது. இப்படிப்பட்டவரை கோவில் நிர்வாக வாரிய தலைவராக நியமித்திருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் குக்கே சுப்ரமண்யர் கோயில் நிர்வாக தலைவராக ஹரிஷ் இஞ்சாடியை நியமித்த விஷயத்தில், தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என அமைச்சர் திணேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். அவரது பெயரை அப்பதவிக்கு தான் சிபாரிசு செய்ய வில்லை எனவும், தேர்தல் மூலமாகவே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். ஹரிஷை நியமித்தது சரியல்ல எனவும், இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரிடம் விசாரிப்பேன் எனவும் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.