தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்கு பங்கேற்க வருமாறு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்த அழைப்பை அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள்.ஏற்க மறுத்துள்ளனர். இதனால் அக்கட்சிக்குள் பெரும் சலசலப்பு வெடித்துள்ளது.
1980-களில் வன்னியர் சங்கமாக இயங்கி வந்த அமைப்பை 1989-ல் பாமக என்னும் அரசியல் இயக்கமாக தோற்றுவித்தார் மருத்துவர் ராமதாஸ். கடந்த 35 ஆண்டுகளாக அக்கட்சி பல்வேறு நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொண்டுள்ளது. தேர்தல்களில் அக்கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்காவிட்டாலும் கூட, அரசியல் தளத்தில் தீவிரமான கருத்தியல்களோடு இயங்கி வந்தது. இதற்கு காரணம் அக்கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் தான். 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலையை காரணம் காட்டி, இளைஞர் அணியின் தலைவராக இருந்த அன்புமணி, கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதன்பிறகு தான் அக்கட்சிக்குள் பூசல்கள் வெடிக்க ஆரம்பித்தன.
அதாவது, கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு ஆகியவற்றில் பாமக நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளராக சௌமியா நிறுத்தப்பட்டது முதற்கொண்டு பல்வேறு விஷயங்களில் இருவரும் வெவ்வேறு நிலைப்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் பாமகவின் இளைஞரணி தலைவராக தனது பெயரன் முகுந்தன் பரசுராமனை மேடையிலேயே திடீரென அறிவித்தார் மருத்துவர் ராமதாஸ். இதற்கு அந்த மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். கட்சிக்குள் நேற்று வந்தவர்களுக்கு எல்லாம் பதவியை கொடுப்பீர்களா? என்று தனது அதிருப்தியை வெளியிட்டார். இந்த கட்சி நான் உருவாக்கியது, இஷ்டம் இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் போங்கள் என்று மருத்துவர் ராமதாசும் கூறினார். உடனே தான் பனையூரில் தனி அலுவலகம் தொடங்கி விட்டதாகவும், நிர்வாகிகளும் – தொண்டர்களும் தன்னை இனி அங்கு வந்து சந்திக்கும்படி அறிவித்தார் அன்புமணி.
ராமதாசையும், அன்புமணியையும் சமரசம் செய்ய அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனை அளிக்கவில்லை. இதனிடையே எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கூட்டணியில் சேர்வது என்ற விவகாரத்தில் இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. அதிமுக கூட்டணியில் சேரலாம் என்பது அன்புமணியின் கணக்கு. திமுக கூட்டணியில் இணையலாம் என்பது ராமதாசின் விருப்பம். தனது நிலைப்பாட்டிற்கு அன்புமணி தடையாக இருப்பார் என்று நினைத்த ராமதாஸ், கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பாமகவுக்கு இனி நானே தலைவராக செயல்படுவேன், இளைஞர்களை வழிநடத்துவேன், தேர்தல் கூட்டணிகளை முடிவு செய்வேன், அன்புமணி செயல் தலைவராக இருப்பார் என்று அறிவித்தார். இதுவும் நிர்வாகிகள் மத்தியில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் தான் கடந்த 11-ந் தேதி மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் பாமக சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெற்றது. இதனை முன்னின்று வெற்றிகரமாக நடத்தியவர் அன்புமணி ராமதாஸ் தான். ஆனால் மேடையில் ராமதாஸ் பேசும்போது, அன்புமணியை மறைமுகமாக சீண்டும்வகையில் பதவியில் இருந்து தூக்கி கடலில் வீசிவிடுவேன் என்றார். 12 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மாநாட்டை பற்றி பேசாமல் அன்புமணியை விமர்சித்தது கட்சியினருக்கே உவப்பாக இல்லை.
இந்நிலையில் இன்று (16/5/2025) தைலாபுரம் தோட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றும், அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்து இருந்தார். பாமகவில் மொத்தம் 108 மாவட்டச் செயலாளர்கள் உள்ளனர். ஆனால், 90 சததவித மாவட்டச் செயலாளர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு செல்லாதது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமதாசை சமாதானப்படுத்த வெறும் 6 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே தைலாபுரம் தோட்டத்திற்கு சென்றுள்ளனர். கிருஷ்ணகிரி, கோவை, விருதுநகர், காரைக்கால், திருவள்ளுர் மேற்கு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தான் பங்கேற்றுள்ளனர். ஆனால் பாமக வலுவாக இருக்கும் வடமாவட்டங்களைச் சேர்ந்த எந்தவொரு மாவட்டச் செயலாளர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக அன்புமணி ராமதாஸ் கூட பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் கட்சிக்குள் அன்புமணிக்கே செல்வாக்கு என்பது தெரியவந்துள்ளது. மேலும் சென்னையில் போட்டி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தினால் அதில் பங்கேற்க அன்புமணி ராமதாஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் இருப்பாகவும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் பாமகவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால் அன்புமணிக்கு வழிவிட்டு ராமதாஸ் ஒதுங்கிக் கொள்வதே நலம்.
