செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகராட்சியில் ரூ.300.51 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் கழிவுநீர் கால்வாய் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதேப் போல ரூ.188 கோடி மதிப்பீட்டில் செங்கல்பட்டு நகராட்சியில் கழிவுநீர் கால்வாய் திட்டம் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் ரூ.188 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வருகிறது.
அவ்வாறு நடைபெற்று வரும் பணிகள் மந்த கதியில் நடைபெறுவதாகவும், இதனால் சாலைகளில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டு, விபத்துகள் எற்படும் அபாயம் நிலவுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதில் குறிப்பாக செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் சாலைகளின் நடுவில் பள்ளம் தோண்டி அதில் பாதாள சாக்கடை இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பைப்லைன் இணைப்பதற்காக சாலைகளின் நடுவே பள்ளம் தோண்டி குழாய்கள் இணைக்கப்படுகிறது. பள்ளத்தை தோண்டி குழாய்களை புதைத்து பணி முடிந்த பிறகு கூட, தோண்டிய பள்ளத்தை மூடாமல் மண்ணை வாரி இறைத்துவிட்டு சென்றுள்ளனர் நகராட்சி அதிகாரிகள்..
இதனால் சாலையில் கார்கள் செல்ல முடியாமலும், இருசக்கர வாகனத்தில் செல்லக் கூடியவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த நான்கு நான்கு நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால் சாலைகளை தோண்டிய இடத்தில் பள்ளம் விழுந்து வாகனங்கள் சிக்கி கொள்கின்றன.
பாதாள சாக்கடை குழாய்கள் புதைத்த உடனே அந்த சாலையை சீரமைத்த பிறகு அடுத்த தெருவிற்கு சென்றிருக்க வேண்டும். திட்டமிடாமல் பாதாள சாக்கடை திட்டம் என்கிற பெயரில் மக்களுக்கு நல்லது செய்வதாக நினைத்து சாலையை பாழாக்கி மக்களை சிரமப்படுத்தி வருகின்றனர். உடனடியாக அண்ணாநகர் சாலைகளை ஆய்வு மேற்கொண்டு சாலைகளின் நிலைமையை ஆராய்ந்து துரிதமாக சாலையை சீர்செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
