தம்பதிகளுக்கு இடையே வரும் சந்தேகத்தால், பல குடும்பங்கள் விபரீத செயல்களில் ஈடுபட்டு நிலைகுலைந்து போகும் செய்திகளை நாம் தினமும் படித்தும், கேட்டும் வருகிறோம். சமீபகாலமாக, தனது துணையை கண்காணிக்க சமூக வலைதளங்களை தம்பதியினர் பயன்படுத்தி வருகின்றனர். இது ஒரு நவீன டெக்னிக். அப்படி கணவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பெண்ணின் பெயரின் ஃபேக் ஐடி உருவாக்கி கணவரை வேவு பார்த்துள்ளார் மனைவி ஒருவர்.
டெல்லியை சேர்ந்த 30வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது பெயர் மற்றும் விவரங்களை பயன்படுத்தி சமூக வலைதளத்தில் மர்ம நபர் ஐடி ஒன்றை தொடங்கி, அதன் மூலம் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொந்தரவு செய்வதாக அப்பெண் தனது புகாரில் கூறியிருக்கிறார்.
இது குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார், சந்தேகப்பட்ட ஃபேக் ஐடியின் மொபைல் எண்ணை கண்டறிந்தன. அந்த சிம் கார்டு உத்தரபிரதேச மாநிலம் காசிபூர் பகுதியில் வாங்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது. அதனை வைத்து அதன் உரிமையாளரின் தற்போதைய இருப்பிடத்தை போலீசார் கண்டறிந்தனர்.
அதன்படி டெல்லியின் நங்லோலி பகுதியில் வசித்து வரும் 26-வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து சிம் கார்டு, மைபல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அவரது கணவர் சமூகவலைதளத்தில் பகிர்ந்த புகைப்படத்தில் இளம்பெண் ஒருவர் இருந்துள்ளார். அவருக்கும், தனது கணவருக்கும் இடையே தொடர்பு இருக்குமோ என சந்தேகமடைந்த அப்பெண், தனது கணவரின் செல்போனில் இருந்து அப்பெண்ணுக்கு அபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.
அதற்கு அப்பெண் பதில் அளிக்கவில்லை தனது கணவர் மீது சந்தேகம் அடைந்த மனைவி, அப்பெண்ணின் பெயரி ஃபேக் ஐடி தொடங்கி கணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அத்தோடு அப்பெண்ணின் நண்பர்கள், உறவினர்களுக்கும் குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு செய்துள்ளார். மனைவியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.