நிதி ஆயோக்-ல் கலந்துகொள்ள டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக், 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் செயல்பட்டுவருகிறது. இக்குழுவின் தலைவராக பிரதமர் நரேந்திரமோடி பொறுப்பேற்று உள்ளார். ஆண்டுதோறும் ஒருமுறை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம், இம்முறை தலைநகர் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
இந்த கூட்டம் இன்று காலை 9 மணிக்கு பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான கூட்டத்தில், அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று டெல்லிக்கு சென்றுள்ளார்.
இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்கிற ஸ்டாலின், தமிழகத் தேவைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய, பிரதமரிடம் நேரடியாக கோரிக்கை விடுக்க உள்ளார். இதேபோல, மற்ற மாநிலங்களின் முதல்வர்களும் தங்களது மாநில நிதி தேவைகளை முன்வைக்கவுள்ளனர்.
கூட்டம் முடிந்த பின்பு, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இரவு 7.30 மணிக்கு விமானமெடுத்து சென்னைக்குத் திரும்ப இருக்கிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில், இந்தியா கூட்டணியில் உள்ள தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.