ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்த ஊர் திருப்பதி அருகே உள்ள நாராவாரி பள்ளி கிராமம். நாராவாரி பள்ளி சந்திரகிரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமமாகும். ஆனால் சந்திரபாபு நாயுடு கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் தொகுதியில் இருந்து ஆந்திர சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று முதலமைச்சராகவும் மாநில எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார்.
இந்த நிலையில் குப்பம் தொகுதியில் ஒரு சொந்த வீடு கூட இல்லாத சந்திரபாபு நாயுடு இந்த தொகுதிக்கு சொந்தக்காரர் கிடையாது என்று எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வந்தது. எனவே அங்கு சொந்தமாக வீடு கட்டி குடியேற வேண்டும் என்று முடிவு செய்த சந்திரபாபு நாயுடு கடந்த 5 ஆண்டுகளாக அதற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் அவரால் அங்கு வீடு கட்ட இயலவில்லை.

இந்த நிலையில் மீண்டும் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ஆந்திராவில் நடைபெற்று வரும் நிலையில் அவர் தன்னுடைய கனவு வீட்டை குப்பத்தில் கட்டி முடித்துள்ளார்.

நேற்று(24.05.2025) குப்பத்திற்கு வந்த சந்திரபாபு நாயுடு இன்று அதிகாலை சுப முகூர்த்த நேரத்தில் ஹோமம், பூஜை ஆகியவற்றை நடத்தி பால் காய்ச்சி அந்த வீட்டில் மனைவி, மகன், மருமகள் ஆகியோருடன் குடியேறினார். சொந்த வீட்டில் குடியேறுவதற்காக குப்பம் வந்த சந்திரபாபு நாயுடுவிற்கு கட்சி தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
