பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அன்புமணி ராமதாஸ் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் கட்சி அலுவலக முகவரியை மாற்றியுள்ளார்.
சமீபத்தில் தைலாபுரத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டி, கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில், அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு என்றும், பொதுக்குழுவைக் கூட்டி அவரை நீக்குவேன் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைத்தார்.
இந்த உட்கட்சி மோதலுக்குப் பிறகு அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்விகள் எழுந்திருக்கும் சூழலில், பா.ம.க. மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை அன்புமணி ராமதாஸ் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், “கட்சியில் என்றும் அடிமட்டத் தொண்டனாக இருக்கவே விரும்புகிறேன். பா.ம.க. என்பது யாருடைய தனிச் சொத்தும் இல்லை; தொண்டர்களாகிய நீங்கள் தான் பாட்டாளி மக்கள் கட்சி” என்று குறிப்பிட்டார். மேலும், “எனக்கு நேற்றுதான் விடுதலை கிடைத்தது. இனி எந்தத் தடைகள் வந்தாலும், உடைத்தெறிந்து முன்னேறுவோம்” என்றும் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
இந்த நிலையில், பா.ம.க. அலுவலக முகவரியை அன்புமணி ராமதாஸ் மாற்றியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தில், கட்சியின் தலைமை அலுவலக முகவரி சென்னை, தி.நகர் தெருவில் உள்ள தனது வீட்டின் முகவரியாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, பா.ம.க.வில் நிலவி வரும் உட்கட்சிப் பூசலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.