மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள கலைஞர் திடலில் திமுகவின் மாநில பொதுக்குழு கூட்டம் ஜூன் 1ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக அண்ணா அறிவாலயம் போன்ற அமைப்புடன் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜூன் 1 அன்று காலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை வந்தார். அவருக்கு விமான நிலையம் முதல் புது ஜெயில் சாலை வரை “ரோட் ஷோ” ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு புதூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் அவர் ஓய்வெடுத்தார்.
முதலமைச்சர் வருகை தந்த சாலைகள் இருபுறமும் திமுகவின் கொடிகள் மற்றும் தோரணங்கள் அமைக்கப்பட்டு கோலாகலமாக காட்சியளித்தன.
முதலமைச்சர் கோரிப்பாளையம் வழியாகச் சென்றதால், அந்தப் பகுதியில் கழிவுநீர் செல்லும் பந்தல்குடி கால்வாய் அவரது பார்வையில் படாமல் மறைக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி அதிகாரிகள் அந்தக் கால்வாயை சாரம் கட்டி துணி வைத்து மறைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கழிவுநீர் கால்வாயை மறைத்த இந்தச் செயல் குறித்து அப்பகுதி மக்கள் முதலமைச்சரிடம் முறையிட இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, தற்காலிகமாக மறைக்கும் இத்தகைய செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.