ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல்லும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஹென்ரிச் க்ளாசனும் அறிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேனும், சுழற்பந்து வீச்சாளரும், மிகச்சிறந்த பீல்டரும் என்றால் அது க்ளென் மேக்ஸ்வெல் தான். 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த மேக்ஸ்வெல், இதுவரை 149 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 3,990 ரன்கள் எடுத்துள்ளார். 77 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி உள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 126 ஆகும். 2015 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் உலககோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றபோது அதன் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்களில் மேக்ஸ்வெல்லும் ஒருவர்.
சமீபகாலமாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மேக்ஸ்வெல் முழு ஆட்டத்திலும் பங்கேற்க முடியாமல் திணறி வந்தார். மேலும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 ஓவர் உலக கோப்பை போட்டியில் முழுமையான கவனம் செலுத்தும் வகையில் 50 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்காக மேக்ஸ்வெல் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று தென்னாப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேனான ஹென்ரிச் கிளாசன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணிக்காக 60 ஒருநாள் போட்டியில் விளையாடி, 2,141 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 174 ரன்கள் குவித்துள்ளார். 58 டி20 போட்டிகள் விளையாடிய இவர் 1,000 ரன்கள் எடுத்துள்ளார். 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் 104 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கிளாசன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து 2024-ம் ஆண்டே ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக க்ளாசன் விளையாடி வருகிறார்.