சபரிமலையில் ஐயப்பன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்தை முன்னிட்டு திறக்கப்பட்டது சபரிமலை நடை!!
சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு , கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றினார்.
தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கேரளாவில் உள்ள உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மற்றும் மகர விளக்கு காலங்களை தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம்.
இது தவிர ஓணம்,சித்திரை விசு, வைகாசி விசாகம், நிறை புத்தரிசி திருவிழா உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தினங்களிலும் நடை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்படும்.
அந்த வகையில் நாளை பிரசித்தி பெற்ற”பிரதிஷ்டா தின” சிறப்பு பூஜைகள் நடைபெறுவதை ஒட்டி இன்று மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது.சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு , கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து கற்பூர ஆழியில் தீபம் ஏற்றினார்.சபரிமலையில் ஐயப்பன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்தன்று சாமி தரிசனம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
இதனால் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.சிறப்பு பூஜைகளுக்குப் பின் நாளை (05.06.25) இரவு 10.30 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
நாளை(05.06.25) நடை அடைக்கப்பட்ட பின், மலையாள “மிதுனம்” மாதம் மற்றும் தமிழின் “ஆனி” மாதங்களின் மாதாந்திர பூஜைக்காக வரும் ஜூன் 14ம் தேதி நடை திறக்கப்பட்டு, ஜூன் 19ஆம் தேதி வரை பூஜைகள் நடக்கும்.
பக்தர்கள், தரிசனத்திற்கு sabarimalaonline.org.in முன்பதிவு செய்யலாம் எனவும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..