மதுரையில் அ.தி.மு.க. கொடிக்கம்பங்களை சாலையோரங்களில் நட்டு வைப்பதற்கும், கம்பத்தின் உயரத்தை அதிகரிப்பதற்கும் அனுமதி கேட்டு அந்த கட்சியினர் மதுரை ஐகோர்ட்டில் சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சாலையோரங்களில் உள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த கொடிக்கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்சில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இந்தநிலையில் இந்த விவகாரத்தில் மதுரை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் இருந்து தங்களுக்கு விலக்கு அளித்து உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ,
இந்த வழக்கில்கட்சியை மனுதாரராக சேர்க்காமலேயே, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பொது இடங்களில் கட்சி கொடிகம்பங்களை வைக்க அனுமதி இல்லை என கூறி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
எனவே , இந்த உத்தரவை எதிர்த்து, ரத்து செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள்,
இந்த வழக்கில், மனுதாரர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், இந்த வழக்கில் முதன்மை செயலாளரை எதிர் மனுதாரராக சேர்த்து உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை அடுத்த விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.