இலங்கை வன்னி தொகுதியின் முன்னாள் எம்.பி திலீபன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ” 1990 ஆம் ஆண்டு இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டபோது இந்தியாவிற்கு அகதியாக வந்து விருதுநகர் அகதிகள் முகாமில் தங்கி இருந்தேன். பின்னர் 2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்று, அங்கு வன்னி தொகுதியில் போட்டியிட்டு வன்னி தொகுதியின் எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டு 2024 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தேன்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி இலங்கையிலிருந்து வெளிநாடு சென்றபோது கொச்சி விமான நிலையத்தில் இந்திய பாஸ்போர்ட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கிற்கும் எனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. இந்த வழக்கில் ஜாமின் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன். அதனை விசாரித்த நீதிமன்றம் திருச்சி சிறப்பு அகதிகளின் முகாமில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது. வழக்கில் இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில் அதில் என் மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை. என் மீது வேறு வழக்குகளும் இல்லை. எனவே திருச்சி சிறப்பு முகாமில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, “இது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி முன்பாக இந்த வழக்கை பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.