நீண்ட காலப் பதட்டத்திற்கும் போர் மேகங்களுக்கும் மத்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இறுதியாக எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க போர் நிறுத்த ஒப்பந்தம் உலக அரங்கில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள இந்த அமைதி உடன்படிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வந்த பதட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என உலக நாடுகள் நம்புகின்றன. எனினும், இந்த நிம்மதிப் பெருமூச்சை ஒட்டுமொத்தமாகக் கலைத்துப்போடும் விதமாக, இஸ்ரேல் எடுத்துள்ள பிடிவாதமான நிலைப்பாடு தற்போது சர்வதேச நாடுகளைக் கவலைகொள்ளச் செய்துள்ளது.

வளைகுடா பதற்றமும் உலக நாடுகளின் தவிப்பும்

இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னர் நிலவிய சூழல் ஒட்டுமொத்த உலகையும் ஒரு பொருளாதார மற்றும் பாதுகாப்புப் படுகுழியில் தள்ளியிருந்தது என்றே கூற வேண்டும். இஸ்ரேல் – ஈரான் போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களம் இறங்கிய நிலையில், நிலைமை மேலும் மோசமாகியது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு, வளைகுடா பிராந்தியத்தை ஒரு போர்க்களமாக மாற்றியிருந்தது. குறிப்பாக, உலகின் மிக முக்கியமான கடல்சார் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) ஏற்பட்ட தொடர் பதட்டங்களும், கப்பல்கள் மீதான தாக்குதல்களும் உலக வர்த்தகத்தை முடக்கின. ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகளால் வளைகுடா நாடுகள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியையும் அதன் விநியோகச் சங்கிலியையும் கடுமையாகப் பாதித்தன.

இந்தத் தொடர் மோதல்களால் உலக அளவில் எரிபொருள் இறக்குமதி பெருமளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, தனது கச்சா எண்ணெய் தேவையின் பெரும்பகுதிக்கு வளைகுடா நாடுகளையே நம்பியிருக்கும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் இதனால் பெரும் நெருக்கடியைச் சந்தித்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்ததால், உள்நாட்டில் பணவீக்கம் அதிகரித்து, நுகர்பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. காப்பீட்டுக் கட்டணங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்தது, உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை முடக்கும் சவாலாக உருவெடுத்தது.

பொருளாதாரப் பாதிப்புகளைத் தாண்டி, வளைகுடா நாடுகளில் பிழைப்புக்காகவும் வேலைக்காகவும் சென்றிருந்த லட்சக்கணக்கான வெளிநாட்டவர்களின் நிலைதான் பெரும் கவலைக்குரியதாக இருந்தது. இந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்குச் சென்று வேலை பார்க்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் தினசரி மரண பயத்துடனேயே வாழ வேண்டிய சூழல் நிலவியது. ஏவுகணைத் தாக்குதல்களும், போர்ச் சூழல்களும் அங்குள்ள தொழிலாளர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியதால், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தாயகம் திரும்புவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்ற நிலை உருவானது. இவர்களின் பாதுகாப்பு குறித்தும், எதிர்காலம் குறித்தும் இந்திய அரசுக்கு பெரும் கவலையும் அழுத்தமும் தொடர்ச்சியாக இருந்து வந்தது.

கையெழுத்தான ஒப்பந்தம்

இத்தகையதொரு இக்கட்டான, பதைபதைப்பான சூழலில் தான், ஒரு வழியாக அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உடன்படிக்கை, முக்கியமாக வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வரும் ராணுவ மோதல்களுக்கு உடனடி முற்றுப்புள்ளி வைப்பதையும், சர்வதேச கடல்சார் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் முழுமையான ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, பிராந்தியத்தில் இருதரப்பு விரோதப் போக்குகளும், ஆயுதமேந்தியத் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்படும். இதற்குப் பிரதிபலனாக, ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான சர்வதேசப் பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட்டு, உலகெங்கிலும் முடக்கி வைக்கப்பட்டிருந்த அந்த நாட்டின் பல பில்லியன் டாலர் மதிப்பிலான நிதிச் சொத்துக்கள் விடுவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியைச் சீரமைக்கவும், கச்சா எண்ணெய் விலையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் இந்த உடன்படிக்கையின் விதிகள் வழிவகுக்கின்றன.

முட்டுக்கட்டை போடும் இஸ்ரேலின் பிடிவாதம்

இத்தகையதொரு இக்கட்டான, பதைபதைப்பான சூழலில் தான், ஒரு வழியாக அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தம் கையெழுத்தாகி விட்டதே என உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்டன. பிராந்தியத்தில் அமைதி திரும்பும், பொருளாதாரம் சீராகும் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில், அதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக இஸ்ரேல் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த இந்த அமைதி ஒப்பந்தம் தங்களைக் கட்டுப்படுத்தாது என்றும், தங்களுடைய முதன்மையான பாதுகாப்பு கவலைகளுக்கு இந்த ஒப்பந்தத்தில் தீர்வு காணப்படவில்லை என்றும் இஸ்ரேல் மிக வெளிப்படையாகவே அறிவித்துவிட்டது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி அரசாங்கத்தில் உள்ள முக்கிய அமைச்சர்கள், இந்த ஒப்பந்தம் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்றும், இப்பிராந்தியத்தில் தங்களின் ராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இந்த ஒப்பந்தத்திற்கு எந்த உரிமையும் இல்லை என்றும் கொதித்து எழுந்துள்ளனர். குறிப்பாக, இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-கிவிர், “இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் ஒரு தரப்பு அல்ல” என்று கூறியுள்ளதுடன், நாட்டின் பாதுகாப்பு கொள்கைகளுக்கு இது பொருந்தாது என்றும், தங்களின் ராணுவ இலக்குகளை இஸ்ரேல் தனிச்சையாகத் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார். இதேபோல் நிதியமைச்சர் பெசலல் ஸ்மோட்ரிச், இந்த ஒப்பந்தத்தை “இஸ்ரேலுக்கும் சுதந்திர உலகிற்கும் எதிரானது” என்று விமர்சித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் யோவ் காட்ஸ், லெபனான், சிரியா மற்றும் காசா ஆகிய மூலோபாயப் பகுதிகளில் இருந்து இஸ்ரேல் ராணுவம் பின்வாங்காது என்பதைத் திட்டவட்டமாக மறுமுறை வலியுறுத்தியுள்ளார். தேசிய பாதுகாப்பிற்கு இந்த பாதுகாப்பு மண்டலங்களை (Security Zones) தக்கவைப்பது மிக அவசியம் என்பது அவர்களின் வாதம். இந்த விவகாரத்தில் ஆளும் கட்சி மட்டுமல்லாது, எதிர்கட்சித் தலைவர்களான யாயிர் கோலன் மற்றும் யாயிர் லாபிட் ஆகியோரும் கூட, இந்த ஒப்பந்தம் இஸ்ரேலின் வெளியுறவுக் கொள்கைக்குப் பின்னடைவு என்றும், தங்களின் ராணுவ வெற்றிகளை இது பலவீனப்படுத்துகிறது என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

கேள்விக்குறியாகும் உலக அமைதி

ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அதன் ஆதரவுப் பெற்ற பிற ஆயுதக் குழுக்களின் செயல்பாடுகள் போன்ற முக்கியப் பிரச்சினைகளுக்கு இந்த ஒப்பந்தத்தில் முறையான தீர்வு காணப்படவில்லை என்பதே இஸ்ரேலின் முதன்மைக் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும், ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்படுவதும், முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்படுவதும் ஈரானின் பிராந்திய ஆதிக்கத்தை மேலும் பலப்படுத்தும் என இஸ்ரேல் அஞ்சுகிறது.

அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் வளைகுடா அமைதியை நோக்கி நகர முற்படும் போது, இஸ்ரேலின் இந்த அடம் பிடிக்கும் போக்கும், தன்னிச்சையான ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வோம் என்கிற எச்சரிக்கையும் ஒட்டுமொத்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனால், வளைகுடா பிராந்தியத்தில் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் பதற்றத்தை அதிகமாக்கலாம். இஸ்ரேலின் இந்த பிடிவாதப் போக்கால் போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிக்குமா அல்லது மீண்டும் வளைகுடாப் பகுதி போர்க்களமாக மாறுமா என்பதை சர்வதேச சமூகத்தின் அடுத்தகட்ட நகர்வுகளே தீர்மானிக்கும்.

– பா. முகிலன்

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version