இந்துக்களின் முக்கிய பண்டிகையாக கார்த்திகை தீபம் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தீப ஒளியின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் ஒரு பண்டிகையாகும். சிவன் மற்றும் திருமால் இருவருக்கு இடையே யார் பெரியவர் என்கிற சர்ச்சை ஏற்பட்டபோது சிவன் ஜோதிப் பிழம்பாக நின்ற நாளே கார்த்திகை தீபமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீப ஒளியானது நம் வாழ்வில் உள்ள இருளை நீக்கி, ஞானம் மற்றும் செல்வத்தை கொண்டு வரும் என்கிற நம்பிக்கையுடன் இந்த பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் இது சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இந்த ஆண்டு கிருத்திகை நட்சத்திரம் டிசம்பர் 3 மாலை 04:48 மணிக்கு தொடங்கி டிசம்பர் 4ஆம் தேதி பிற்பகல் 03:08 வரை நீடிக்கிறது. எனவே தீபம் ஏற்றுவதற்கு டிசம்பர் 3 ஆம் தேதி மாலை 6:00 மணி என்பது பொருத்தமான நேரமாகும்.

சில பஞ்சாங்கங்களின்படி கார்த்திகை நட்சத்திரம் நீடிப்பதன் அடிப்படையில் டிசம்பர் 4 வியாழக்கிழமை அன்றும் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இருப்பினும் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது டிசம்பர் 3 என்பதால் இந்த நாளே தீபத்திருநாள் கொண்டாடுவதற்கு உகந்த நாளாகும்.

திருக்கார்த்திகை தினத்தன்று காலையில் நீராடி, உபவாசம் இருந்து மாலையில் தீபம் ஏற்றிய பிறகு உணவருந்துவது சிறந்தது. நாள் முழுவதும் சிவபெருமான் அல்லது முருகப்பெருமானை நினைத்து விரதம் இருக்கலாம். பொதுவாக மாலை வேளையில் சூரியன் மறைந்த பின்னர் ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் தீபம் ஏற்றுவது உகந்தது. திருவண்ணாமலைகில் தீபம் ஏற்றிய பிறகு நம் வீடுகளில் தீபம் ஏற்றலாம்.

தீபம் ஏற்றிய பின்னர் முருகப் பெருமான் விநாயகரை மனதார வழிபடலாம். கந்த சஷ்டி கவசம், சிவபுராணம் உள்ளிட்ட பக்திப் பாடல்களை பாடுவது சிறந்தது. பொரி உருண்டை, அப்பம், அவல், பாயாசம் போன்றவற்றை தயார் செய்து இறைவனுக்குப் படைத்து குடும்பத்தாருக்கும், அண்டை வீட்டாருக்கும் கொடுக்கலாம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version