தேனி மாவட்டம் குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவிலில் திருக்கல்யாணம் விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேனி மாவட்டம் குச்சனூரில் உள்ள சுரபி நதிக்கரையில் சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் ஆடி மாதங்களில் பிரம்மோற்சவ ஆடி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த வருட திருவிழாவில் முக்கிய நிகழ்வாக இன்று மூன்றாவது வெள்ளிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கும் நீலாதேவிக்கும் திருக்கல்யாணம் விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் சனீஸ்வர பகவானின் மனைவி நீலாதேவிக்கும் உருவம் கிடையாது என்பதால் கும்பத்தில் நீலாதேவி உருவம் அமைத்து,பச்சை பட்டு உடுத்தி சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து கும்பத்திற்கு சனீஸ்வர பகவான் தாலிகட்டும் நிகழ்ச்சியை நடத்தினார்கள். அவ்வாறு அமைக்கப்பட்ட நீலாதேவியின் உருவம் இன்றிலிருந்து சரியாக மூன்றாவது திங்கட்கிழமை அன்று சுரபி நதியில் கரைக்கப்படும்.
இந்த திருக்கல்யாண விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் கயிறு, வளையல், குங்குமம், மஞ்சள் என்று பிரசாத பொருட்களை வழங்கினார்கள்.