சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க கோவிந்தா கோஷங்களுடன் புறப்பட்ட திருப்பதி வெண்பட்டு திருக்குடைகள்.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவத்தின் போது, ஏழுமலையான் கருட சேவைக்கு தமிழக பக்தர்கள் சார்பில் வெண்பட்டு திருக்குடைகள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம், சென்னை சென்னகேசவ பெருமாள் கோவிலில் இருந்து இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் புறப்பட்டது. உடுப்பி பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீ வித்யாதீஷ தீர்த்தரு சுவாமிகள் ஆசியுரை வழங்கி தொடங்கி வைத்தார்.

பெருமாளிடம் வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகளை, திருப்பதி திருக்குடையிடம் பக்தர்கள் சமர்ப்பிப்பது வழக்கம். அது ஏழுமலையானை சென்றடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால்தான், திருப்பதி திருக்குடை ஊர்வல காலத்தில் சென்னையில் இருக்கும் பக்தர்கள், விரதம் இருந்து திருக்குடைகளை தரிசிக்கிறார்கள். ஆரத்தி காண்பித்து வழிபடுகிறார்கள். திருக்குடை ஊர்வலம் செல்லுமிடமெல்லாம் மங்களம் பெருகும், வறுமை நீங்கும், நோய் நொடி விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

திருப்பதி பிரம்மோத்சவ காலத்தில், ஏழுமலையான் கோவிலில் நடக்கும் கருட சேவையை முன்னிட்டு, தமிழக மக்கள் சார்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட், திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகளை சென்னையில் இருந்து 5 நாட்கள் ஊர்வலமாக எடுத்து சென்று சமர்ப்பணம் செய்து வருகிறது.

21-வது ஆண்டாக, இந்த ஆண்டும் திருப்பதி திருக்குடை ஊர்வலம், இன்று சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கி தொடர்ந்து 5 நாட்கள் ஊர்வலமாக சென்று, 27-ம் தேதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு திருமலையில், ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

இந்த திருக்குடைகள் ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா முழக்கமிட்டனர். மேள தாளங்கள் முழங்க வெண் பட்டு திருக்குடைகள் ஊர்வலத்தை மக்கள் பூக்கள் தூவி வரவேற்றனர், உடன் பெருமாளின் தசாவதாரங்கள், கோமாதா உள்ளிட்ட சிலைக்கும் ஊர்வலமாக சென்றன.

Share.
Leave A Reply

Exit mobile version