தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த வியனரசு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “ஜூலை 7ஆம் தேதி திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலின் குடமுழுக்கு நடைபெற உள்ளது. தமிழ் மொழியில் நடத்த கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை. ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலின் குடமுழுக்கு விழாவின் போது யாகசாலை, கருவறை, கோபுரவிமான பூஜை ஆகியவற்றை தமிழ் மொழியில் மந்திரங்களை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
இந்து சமய அறநிலையத்துறையின் தரப்பில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலின் இணை ஆணையர் பதில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “யாகசாலையில் மந்திரங்கள் ஓதுவது தொடங்கி, திருமுறை பாடுவது, திருப்புகழ் பாடுவது, பன்னிரு திருமுறைகள் பாடுவது, 64 ஓதுவார்கள் பூஜை செய்வது முதல் குடமுழுக்கு வரை நிகழ்வுகள் தமிழிலேயே நடைபெற உள்ளன. குடமுழுக்கின் போது தமிழ் வேத மறைகளும், சமஸ்கிருத வேதங்களும் ஓதப்படும்” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “கோவில் நிர்வாகத்தால் நடத்தப்படும் விழாக்களில் இந்து சமய அறநிலையத் துறையின் விதிகள் மீறப்பட்டால், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரையோ, அல்லது சம்பந்தப்பட்ட அலுவலரையோ அணுகலாமே தவிர நீதிமன்றம் தலையிட இயலாது. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக இந்த சமய அறநிலையத்துறை ஆணையர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.