நாமக்கல்லில் முட்டையின் பண்ணை கொள்முதல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் ஏற்றுமதி தேவை அதிகரிப்பு காரணமாக இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கிருந்து தினசரி சுமார் 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

முட்டையின் பண்ணை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) நிர்ணயித்து வருகிறது. மேற்காசிய போர் காரணமாக கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததுடன், வெளிநாட்டு ஏற்றுமதியும் உயர்ந்ததால் கடந்த சில வாரங்களாக முட்டை விலை தொடர்ந்து ஏற்றம் கண்டது.

இந்த நிலையில், ஏற்கனவே ரூ.6.50 ஆக இருந்த பண்ணை கொள்முதல் விலை, மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டைக்கு ரூ.6.55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

கோழித்தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வு, சந்தையில் அதிகரித்த தேவை மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி ஆகியவை இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

தற்போது சில்லறை விற்பனையில் ஒரு முட்டை ரூ.8 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், புதிய பண்ணை விலை உயர்வால் சில்லறை சந்தையிலும் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version