அட்லீ – அல்லு அர்ஜுன் இணையும் 700 கோடி பட்ஜெட் டைம் டிராவல் படத்திற்கு ‘ஐகான்’ தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அட்லீ, ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து விஜய்யுடன் இணைந்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் ஹிட் படங்களைக் கொடுத்தார். இதன் பின்னர் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்து, ஷாருக்கானுடன் ‘ஜவான்’ படத்தை இயக்கினார். அந்தப் படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது.
அட்லியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு
‘ஜவான்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அட்லீயின் மதிப்பு பலமடங்கு உயர்ந்தது. பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் அவரது கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் நிலையில், தனது அடுத்த திரைப்படத்தை தெலுங்குத் திரையுலகின் ‘புஷ்பா’ அல்லு அர்ஜுனுடன் இணைந்து உருவாக்கவுள்ளதாக அறிவித்தார்.
இந்த பிரம்மாண்ட படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணியின் முதல் படமாக இது அமைகிறது. டைம் டிராவல் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்காக ஹாலிவுட் டெக்னீஷியன்களுடன் பணியாற்ற அட்லீ திட்டமிட்டுள்ளார். இப்படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளார்; அதில் ஒரு வேடம் அனிமேஷன் கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக உலகத் தரமான VFX குழுவுடன் இணைந்து அட்லீ பணியாற்றி வருகிறார்.
மெகா பட்ஜெட் மற்றும் நட்சத்திரப் பட்டாளம்
சுமார் ரூ.700 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு மட்டும் ரூ.300 கோடியும், அட்லீக்கு ரூ.100 கோடியும் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். மேலும், இதில் ஐந்து கதாநாயகிகள் நடிக்கவுள்ள நிலையில், ஜான்வி கபூர், பாக்கியஸ்ரீ போர்ஸ், தீபிகா படுகோன், மிருணாள் தாக்கூர் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. மேலும் ஒரு கதாநாயகி வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.
தலைப்பு ‘ஐகான்’ ஆக இருக்குமா?
இப்படத்தின் தொடக்கக்கட்ட பணிகள் இப்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு ‘ஐகான்’ என இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது. அல்லு அர்ஜுனை ரசிகர்கள் வழக்கமாக ‘ஐகான் ஸ்டார்’ என அழைப்பதால், இந்தப் பெயர் ரசிகர்களிடையே எளிதில் சென்று சேரும் என்ற நம்பிக்கையிலோ அல்லது இது ஒரு பான்-வேர்ல்டு வெளியீடு என்பதால் சர்வதேச மக்களுக்கு ஏற்ற தலைப்பாக ‘ஐகான்’ தேர்ந்தெடுக்கப்பட்டதோ என்பது தற்போது பேசப்படுகிறது. இந்தக் கூட்டணியில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.