பேட்டை’ மற்றும் ‘காஞ்சனா-3’ படங்களுக்கு வெளிநாட்டு உரிமை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் முரளிக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘பேட்டை’ மற்றும் ‘காஞ்சனா-3’ திரைப்படங்களில் வெளிநாட்டு உரிமைகளை பெற்றுத் தருவதாக மறைந்த இயக்குநர் ராமநாராயணன் மகனும், தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளருமான முரளி, மலேசியாவில் உள்ள மாலிக் ஸ்ட்ரீம் கார்பரேஷன் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதற்காக கடந்த 2018-ம் ஆண்டு மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் 30 கோடி ரூபாயை முரளிக்கு வழங்கி இருந்தது. ஆனால், ஒப்பந்ததின்படி இந்த இரண்டு படங்களின் வெளிநாட்டு உரிமையை மாலிக் ஸ்ட்ரீம் கார்பரேஷனுக்கு அவர் பெற்றுத் தரவில்லை. இதைத் தொடர்ந்து, 15 கோடி ரூபாயை மட்டும் மலேசிய நிறுவனத்துக்கு முரளி திரும்ப அளித்திருந்தார்.
எஞ்சியத் தொகையை திரும்ப செலுத்தாததை தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டு முரளி மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பின்னர், 10 கோடி ரூபாய் காசோலையை மலேசியா நிறுவனத்துக்கு முரளி கொடுத்திருந்தார். இந்த காசோலை வங்கியில் பணம் இல்லாத காரணத்தால் திரும்ப வந்ததையடுத்து, முரளிக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தற்போது செக் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
