இன்று மே 1. தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரம் நடிகர் அஜித் குமார் அவர்களின் 55-வது பிறந்ததினம். தனது கடின உழைப்பாலும், விடாமுயற்சியாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்த அஜித்தின் திரைப் பயணம் மற்றும் சாதனைகள் குறித்த சிறு தொகுப்பு.
1990-ல் ‘என் வீடு என் கணவர்’ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமான அஜித், 1993-ல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அதே ஆண்டில் தமிழில் ‘அமராவதி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
ஆரம்பத்தில் காதல் மன்னனாக வலம் வந்த அஜித்துக்கு, ‘ஆசை’, ‘காதல் கோட்டை’ ஆகிய படங்கள் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தின. பின்னர் ‘வாலி’ படத்தில் அவர் காட்டிய வில்லத்தனமான நடிப்பு அவருக்கு முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றுத் தந்தது. ‘தீனா’, ‘வில்லன்’, ‘வரலாறு’, ‘பில்லா’, ‘மங்காத்தா’, ‘விஸ்வாசம்’ எனத் தொடர் அதிரடி வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ‘தல’யாக உயர்ந்தார்.
1999-ல் வெளியான அஜித்தின் 25-வது படமான ‘அமர்க்களம்’ மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததுடன், அவரின் வாழ்க்கை பயணத்துக்கும் துவக்கமாக இருந்தது. ‘அமர்க்களம்’ படத்தில் நடித்த போது, ஷாலினியை காதலித்த அஜித், பெற்றோர் சம்மதத்துடன் 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். திரையில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் ஒரு சிறந்த காதல் ஜோடியாகத் திகழ்பவர்கள் அஜித் – ஷாலினி.
2000-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதை அன்றைய தமிழக அரசிடம் இருந்து அஜித் பெற்றார். திரையுலகில் அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. ‘வாலி’, ‘வில்லன்’, ‘வரலாறு’ ஆகிய படங்களுக்காகச் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் (Filmfare Awards South) விருதுகளைப் பெற்றுள்ளார். ‘பூவெல்லாம் உன் வாசம்’ (சிறப்பு விருது) மற்றும் ‘ராஜா’ போன்ற படங்களுக்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளைப் அஜித் பெற்றுள்ளார்.
அஜித்தின் பயணம் பூக்களால் ஆனது அல்ல. தொடர் தோல்விகள், அறுவை சிகிச்சைகள் எனப் பல தடைகளை அவர் சந்தித்தார். ஆனால், ஒவ்வொரு முறை விழும் போதும் இன்னும் பலமாக எழுந்து வருவதே அவரின் தனிச்சிறப்பு. “வெற்றி வரும் போது தலைகணமும், தோல்வி வரும்போது மனச்சோர்வும் அடையக் கூடாது” என்பதைத் தனது வாழ்வின் வழியாகக் கொண்டுள்ளார்.
சினிமாவைத் தாண்டி அஜித்திற்கு மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதும் மிகப்பெரிய ஆர்வம் உண்டு. 2003-ல் பார்முலா பிஎம்டபிள்யூ ஆசியா, பிரிட்டிஷ் பார்முலா 3 மற்றும் 2010-ல் நடைபெற்ற எப்.ஐ.ஏ பார்முலா 2 சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் பங்கேற்று உலக அரங்கில் இந்தியாவின் கவனத்தை ஈர்த்தார்.
2025-ல் துபாயில் நடைபெற்ற Michelin 24H Dubai பந்தயத்தில் இவரது ‘அஜித் குமார் ரேசிங்’ அணி 992 பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்தது. மேலும், 2026 ஏப்ரலில் பெல்ஜியத்தில் நடந்த ஸ்பா-பிரான்கார் சாம்ப்ஸ் பந்தயத்தில் அஜித் அணி இரண்டாம் இடம் பிடித்து பதக்கம் வென்றது.
அஜித் தனது ரசிகர் மன்றங்களைக் கலைத்தாலும், சத்தமில்லாமல் பல சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். தனது தந்தை மற்றும் தாயின் பெயரில், ‘மோகினி மணி அறக்கட்டளை’ மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கும், மருத்துவத்திற்கும் உதவி வருகிறார் அஜித்.
கரோனா பேரிடர் காலங்களில் கோடிக்கணக்கான ரூபாய் நிதியுதவி வழங்கியதுடன், தனது ஊழியர்களின் நலனைப் பாதுகாப்பதிலும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.
‘தன்னம்பிக்கை’ என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழும் அஜித், இளைஞர்களுக்கு “சொந்தக் காலில் நில்லுங்கள், குடும்பத்தைக் கவனியுங்கள்” என்ற ஆலோசனையைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்.
அஜித்தின் கலைச்சேவை மற்றும் விளையாட்டுத் துறை பங்களிப்பைப் பாராட்டி, இந்திய அரசு 2025-ம் ஆண்டு அவருக்கு “பத்ம பூஷண்” விருதை அறிவித்தது. ஜனவரி 2026-ல் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களிடம் இருந்து இந்த உயரிய விருதை அஜித் குமார் பெற்றுக் கொண்டார். இது அவரது 30 ஆண்டுகால உழைப்பிற்குத் தேடி வந்த மிகப்பெரிய கௌரவமாகும்.
வெற்றி, தோல்வி, விபத்துகள் என அனைத்தையும் புன்னகையுடன் எதிர்கொள்ளும் அஜித், இன்றைய இளைஞர்களுக்கு ஒரு ‘ரோல் மாடல்’. “வாழு, வாழ விடு” (Live and Let Live) என்ற கொள்கையோடு பயணிக்கும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!…
