தமிழகத்தில் உள்ளாட்சி அலுவலகங்களில் லஞ்சப் புகார்கள் மற்றும் முறைகேடுகள் அதிகரிப்பதாகப் பல தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, கட்டிட அனுமதி, சான்றிதழ்கள் வழங்குதல் மற்றும் டெண்டர் ஒப்புதல் போன்ற பணிகளுக்குப் பெருமளவில் லஞ்சம் வசூலிக்கப்படுவதாகத் தகவல்கள் கசிந்தன. இதனைத் தொடர்ந்து, விவகாரத்தை தீவிரமாகக் கையில் எடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை, மாநிலம் தழுவிய அளவில் அதிரடி சோதனைகளைத் திட்டமிட்டது.

இதன் ஒரு பகுதியாக, நேற்று மாலை ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் 41 முக்கிய உள்ளாட்சி அலுவலகங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்தனர். சென்னையில் தொடங்கி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் புதுக்கோட்டை போன்ற மாநகராட்சிகள் மட்டுமின்றி, நாமக்கல், திருப்பத்தூர், மயிலாடுதுறை என மாநிலம் முழுவதும் உள்ள நகராட்சி அலுவலகங்களிலும் இந்தச் சோதனை நள்ளிரவைத் தாண்டிப் பெரும் பரபரப்புடன் நடைபெற்றது.

சோதனை நடைபெற்ற அலுவலகங்களில் வெளிநபர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை. ஊழியர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அலுவலகங்கள் முழுமையான கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன. சோதனையின் முடிவில், அலுவலகத்தின் ரகசிய அறைகள், டிராயர்கள் மற்றும் இடைத்தரகர்களிடம் இருந்தும் கணக்கில் காட்டப்படாத ரூ.57 லட்சம் ரொக்கப் பணம் சிக்கியது.

அரசு அலுவலக வளாகத்திற்குள் இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது என்பது குறித்து, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முறையான ஆதாரங்களைக் காட்டத் தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த அதிரடிச் சோதனை அரசு ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version