நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் ராஜா ஆகியோர் நெல்லையப்பர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.
நடிகர் தனுஷ் தற்போது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ’டி54’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோர் நெல்லையப்பர் திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலை வருகை தந்தனர்.
அதிகாலையில் நடைபெற்ற திருவனந்தல் பூஜையில் கலந்து கொள்ள வருகை தந்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநரை கோயில் முன்பு கூடி இருந்தவர்கள் ஆர்வமுடன் வரவேற்றனர். அம்பாள் சன்னதி, சுவாமி சன்னதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் விக்னேஷ் ராஜாவுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கோயிலில் இருந்த பக்தர்கள் மற்றும் ஊழியர்கள் நடிகர் தனுஷ் உடன் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் மமிதா பைஜூ, கே.எஸ். ரவிக்குமார், சூரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். பெரும் பொருட்செலவில் பரபரப்பான கதை களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சூரஜ் வெஞ்சரமூடு நடிகர் தனுஷுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் அண்மையில் பதிவிட்டிருந்தார்.
இந்த திரைப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா முன்னதாக இயக்கிய ’போர் தொழில்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக க்ரைம் த்ரில்லர் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தனுஷ் நடித்த பாலிவுட் திரைப்படமான தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் ஹிந்தி மொழியில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
