தனக்கு எது நடந்தாலும் பகிரங்கமாக சொல்லக்கூடிய பாடகி சின்மயி, இயக்குநர் மோகன் விவகாரத்தில் தனக்கு அழுத்தம் கொடுத்தது யார் என்பதை விரைவில் கூறுவார் என எதிர்பார்ப்பதாக நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
‘வந்தே மாதரம்’ பாடல் எழுதி 150 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, ‘சுற்றுச்சூழலை பாதுகாக்க ஓடுங்கள், போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க ஓடுங்கள்’ என்ற தலைப்பில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த திருமுருகன் பூண்டியில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
தனியார் மருத்துவமனை சார்பாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 8 வயது முதல் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை ஆண்- பெண் இருபாலருக்குமான 4 பிரிவுகளில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் குழந்தைகள், பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாரத்தான் போட்டியை தொழிலதிபர் ஆம்ஸ்ட்ராங் பழனிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். பரிசளிப்பு நிகழ்ச்சியில் பாஜகவைச் சேர்ந்த நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியின் முடிவில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மோகன் ஜி படத்தில் பாடியது குறித்து பாடகி சின்மயி தெரிவித்த கருத்து குறித்து நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஞ்சித், “கலைஞர்களுக்கு மதமோ, ஜாதியோ, மொழியோ கிடையாது. மத்திய அரசின் சென்சார் போர்டு மூலமாக தணிக்கை செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில், தமிழ் மொழியில் எழுதப்பட்ட பாடலின் அர்த்தம் தெரிந்து பாடிவிட்டு, தற்போது பாடகி சின்மயி அதுகுறித்து விமர்சித்து பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மோகன் ஜி ஒரு நல்ல இயக்குநர். ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் கதையை நான் கேட்டுள்ளேன். மிகவும் நல்ல கதை. பிளவுபடுத்தப்பட்டு இருக்கிற மக்களை இணைப்பதற்கான ஒரு கதையாகத்தான் அந்த கதையை பார்க்கிறேன். இதுபோன்ற ஒரு கதைக்கு பாடலை பாடிவிட்டு, எந்த விஷயத்திற்காக அவர் எதிர்த்திருக்கிறார் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
கடந்த காலங்களில் தனக்கு நடந்தவற்றை பகிரங்கமாக பேசிய பாடகி சின்மயி, இந்த விவகாரத்திலும் தனக்கு என்ன அழுத்தம் ஏற்பட்டது என்பது குறித்து விரைவில் பகிரங்கமாக சொல்வார் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.
தொடர்ந்து, திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து கேட்டதற்கு, “நாம் அனைவரும் சாமி கும்பிடத்தான் அங்கு செல்கிறோம். வேறு எந்த நோக்கமும் இல்லை. நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றத்தில் வழிபாடு நடக்கும். அது தொடர்ந்து நடைபெறும் என்று நினைக்கிறேன்” என பதிலளித்தார்.
