நடிகை ரெஜினா காஸண்ட்ரா தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் ‘கண்ட நாள் முதல்’ படம் மூலம் அறிமுகமானார். இந்தப் படம் 2005-ம் ஆண்டு நவ.18ம் தேதி வெளியானது. அவர் சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு ரசிகர்கள், திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சிப் பதிவில், “முதல் முறையாக ஒரு படப்பிடிப்பு தளத்துக்குச் சென்றது, நேற்று நடந்தது போல இருக்கிறது. அந்த முதல் நாளில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று தெரியாத பதற்றத்தை உணர்ந்தேன்.
படங்களில் வரும் கதாபாத்திரங்களின் மூலம் பல வாழ்க்கைகளை வாழ்ந்திருக்கிறேன். ஒவ்வொரு கதாபாத்திரமும் எனக்கு ஏதோ ஒன்றைக் கற்றுக் கொடுத்தது.
சந்தேகம், பைத்தியக்காரத்தனம் போன்ற தருணங்களும் இருந்தன. இதை முழுவதும் கடந்து வர என்னுடன் பார்வையாளர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு உற்சாகமும், ஒவ்வொரு அன்பின் துளியும் என் பலமாக மாறியது. அதுதான் என்னை வழி நடத்துகிறது. அதனால் இது என் பயணம் மட்டும் அல்ல, இது நம்முடையது. இது தொடக்கம் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.
