தென்னிந்திய சினிமாவில் தான் உருவக்கேலிக்கு ஆளானதாகவும் ஆபாசமான கருத்துகளை எதிர்கொண்டதாகவும் நடிகை ராதிகா ஆப்தே வருத்தத்தோடு தெரிவித்துள்ளார்.
இந்தி நடிகையான ராதிகா ஆப்தே, தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், கபாலி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் இப்போது நடித்துள்ள ‘சாலி மொஹப்பத்’ என்ற இந்தி படம் தற்போது ஜீ-5 தளத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் , இதுபற்றி அவர் கூறும்போது, “நடிக்கத் தொடங்கிய காலத்தில் இந்தியில் அதிக வாய்ப்புகள் கிடைக்காததால், தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினேன்.
அப்போது எனக்கு பணம் தேவைப்பட்டதால், அதற்காக நடித்தேன். நான் நடித்த ஒரு படத்தின் படப்பிடிப்பு, சிறு நகரம் ஒன்றில் நடந்தது. படப்பிடிப்புத் தளத்தில் அனைவரும் ஆண்களாக இருந்தனர். நான் மட்டுமே பெண்.
அந்த நேரத்தில் அவர்கள் நடந்து கொண்ட விதம் மற்றும் ஆபாசமான பேச்சுகளால் எனக்கு அழுகை வந்தது. அது உண்மையில் அதிர்ச்சிகரமான சம்பவம். எந்தப் பெண்ணும் அப்படியொரு சூழலில் இருப்பதை விரும்ப மாட்டார்.
இந்தியிலும் சில செல்வாக்கு மிக்க நபர்களின் நடத்தைப் பிடிக்காததால் பெரிய படங்களில் இருந்து வெளியேறி இருக்கிறேன்” என்றார்.
