திரைப்படங்களுக்கான தணிக்கை சான்று வழங்குவதற்கான கால அவகாசத்தை 48 நாட்களில் இருந்து 18 நாட்களாக குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மூலம் முழுநீள திரைப்படங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. பொதுவாக இந்த சான்றிதழ் வழங்கப்படுவதற்கு 48 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படும். இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், ”மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்டப்பூர்வ அமைப்பான மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் திரைப்பட சட்டம் 1952, திரைப்பட தணிக்கை விதிகள் 2024 மற்றும் தொடர்புடைய வழிகாட்டுதலின் படி, மக்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக திரைப்படங்களை தணிக்கை செய்கிறது. இந்திய இறையாண்மை, ஒற்றுமை, பாதுகாப்பு, பொது ஒழுங்கு, நாகரீகம், ஒழுக்கம் போன்றவற்றை மீறும் வகையில் காட்சிகள் இடம்பெற்றிருந்தால் மட்டுமே அவற்றை நீக்க அல்லது மாற்றியமைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
திரைப்பட சென்சார் வழங்குவதற்கான கால அவகாசம் ஆன்லைன் சான்றிதழ் முறை அமல்படுத்தப்பட்ட பிறகு 18 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் உத்தரவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திரைப்பட சட்டம் வகை செய்கிறது. இது போன்ற சூழல்களில் நீதிமன்ற உத்தரவுகள் செயல்படுத்தப்படுகின்றன” என்றார்.
