நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அண்மை காலமாக சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. தலைமை செயலகம், ஜிஎஸ்டி அலுவலகம், அதிமுக அலுவலகம் என பல்வேறு இடங்களில் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரின் பெயரில் இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து போலீசார் விசாரித்து வரும் சூழலில் புதிதாக மீண்டும் ஒரு மிரட்டல் வந்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷா வீட்டிற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இவர்கள் மட்டுமில்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், மிரட்டல் விடுத்தவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.