சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் இந்தியாவிற்கு முன்பே அமெரிக்காவில் வெளியாகவுள்ளது.
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வருடத்திற்கு ஒரு படம் வீதம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இந்தாண்டு லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ’கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகளவில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்துடன், ஆமீர்கான், நாகார்ஜூனா, உபேந்திர ராவ், சத்யராஜ் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
பான் இந்தியா அளவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேப் போல டிக்கெட் விற்பனையும் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கான முன்பதிவு அமெரிக்காவில் கடந்த வாரம் தொடங்கி சூடுபிடித்துள்ளது.
இந்தியாவில் கூலி படம் ரிலீசாகும் முன்பே அமெரிக்காவில் ரிலீசாகவுள்ளது. அமெரிக்க நேரப்படி ஆகஸ்ட் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு பிரிமியர் காட்சி திரையிடப்படவுள்ளது. அந்த நேரம் இந்திய நேரப்படி ஆகஸ்ட் 14-ம் தேதி அதிகாலை 4 மணியாகும். இதனால் அமெரிக்கவாழ் தமிழ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.