தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமுமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோருக்கு இடையே விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் ஒரு செய்தி மீண்டும் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்”. மேலும், இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகவும், ஒரு நடிகையுடனான தொடர்புதான் இந்தப் பிரிவுக்குக் காரணம் என்றும் சில இணையதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

விஜய்-சங்கீதா விவாகரத்து குறித்த வதந்திகள் கடந்த 2023-ம் ஆண்டிலிருந்தே அவ்வப்போது கிளம்பி வருகின்றன. குறிப்பாக, முக்கியக் குடும்ப விழாக்கள் மற்றும் கட்சி மாநாடுகளில் சங்கீதா பங்கேற்காதது இத்தகைய ஊகங்களுக்கு வழிவகுத்தது.

தற்போதைய தகவலும் பெரும்பாலும் அதிகாரப்பூர்வமற்ற சில இணையதளங்கள் மற்றும் யூடியூப் சேனல்களிலேயே அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. விஜய் தரப்பிலிருந்தோ அல்லது அவரது குடும்பத்தினரிடமிருந்தோ இது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அல்லது மறுப்பும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இந்த வதந்திகளைப் பலமுறை மறுத்துள்ளனர். சங்கீதா தனது குழந்தைகளின் கல்வி மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக லண்டனில் வசித்து வருவதாகவும், அவர்கள் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர்கள் விளக்கம் அளித்திருந்தனர்.

விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட்டு, 2026 தேர்தலுக்குத் தயாராகி வரும் வேளையில், அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்கும் விதமான இத்தகையச் செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறதா என்ற கோணத்திலும் அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version