வீட்டுக்கு மின் இணைப்பு மறுக்கப்பட்டதை எதிர்த்து கவிஞர் கண்ணதாசனின் மகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கவிஞர் கண்ணதாசனின் மனைவி பார்வதி அம்மாளுக்கு, சென்னை மாடம்பாக்கம் பகுதியில் ஒரு ஏக்கர் 72 செண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனது வாரிசுகளுக்கு அவர் பிரித்து கொடுத்திருந்தார்.
இந்த நிலத்தின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இந்த துணை மின் நிலையத்துக்கு அருகில் காலியாக இருந்த பகுதியை கவிஞர் கண்ணதாசன் குடும்பத்தினர் பாதையாக பயன்படுத்தி வந்தனர்.
இதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எதிர்ப்பு தெரிவித்ததால், கண்ணதாசனின் மகன்கள் தரப்பில் தொடர்பட்ட வழக்கில், துணை மின் நிலையம் பகுதியில் உள்ள நிலத்தை பாதையாக பயன்படுத்த அனுமதியளித்து தாம்பரம் நீதிமன்றம் கடந்த 2011 ம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக மின் இணைப்பு கேட்டு அண்ணாதுரை கண்ணதாசன் விண்ணப்பித்திருந்தார்
ஆனால், மின்வாரியத்துக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்துவதாகக் கூறி, மின்சார வாரியம், மின் இணைப்பு வழங்க மறுத்தது.
இதை எதிர்த்து அண்ணாதுரை கண்ணதாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.
இந்த வழக்கு நீதிபதி மாலா முன் விசாரணைக்கு வந்தபோது, கவிஞர் கண்ணதாசன் மகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், ஏற்கனவே பாதையை பயன்படுத்த தாம்பரம் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருப்பதால், மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் வாதிட்டார்.
மேலும் நீதிமன்ற உத்தரவின் படி துணைமின் நிலையம் அருகே உள்ள நிலத்தை பாதையாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரினார்
இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.