ஹைதராபாத்தில் நடிகை நிதி அகர்வாலைத் தொடர்ந்து நடிகை சமந்தாவும் ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ‘தி ராஜா சாப்’ படத்தின் 2-வது பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் உள்ள லூலு மாலில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் நாயகி நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே பாதுகாப்புகளை மீறி ரசிகர்கள் கூட்டம் கூடியது.
நிகழ்ச்சி முடிவடைந்ததும் நிதி அகர்வால், தன்னுடைய காரை நோக்கிச் சென்றபோது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். சிலர் அவரை தொட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நிதி அகர்வாலால் நகரமுடியவில்லை. அங்கிருந்த சில பாதுகாவலர்கள் ஓடி வந்து அவரை மீட்டு காரில் ஏற்றி வைத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்துக்குப் பலர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இதே போல மற்றொரு சம்பவம் ஹைதராபாத்தில் நடைபெற்றுள்ளது. ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நடிகை சமந்தா சென்றிருந்தார். அதனை அறிந்து ஏராளமான ரசிகர்கள் திரண்ட நிலையில் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சமந்தா சிக்கினார். அவரை மீட்டு கார் இருக்கும் பகுதிக்கு பாதுகாவலர்கள் கொண்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை நிதி அகர்வாலை தொடர்ந்து ஹைதராபாத்தில் இதேபோல நெரிசலில் நடிகை சமந்தாவும் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
