பிரபல தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் (வயது 85) ஆவார். இவர், இன்று (17.05.2026) மாலை கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது உடலைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவரது தற்கொலை பற்றி அடையாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மறைவுச் செய்தியைக் கேட்டு ஒட்டுமொத்த தென்னிந்தியத் திரையுலகினரும் கடும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
பல ஆண்டுகளாகத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த இவர், பல்வேறு மேடைகளில் திரைத்துறை சார்ந்த பிரச்சினைகளுக்காகவும், சிறு முதலீட்டுத் தயாரிப்பாளர்களின் நலனுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். இவருடைய மறைவுக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், முதலமைச்சர் விஜய், இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழ்த்திரைப்படத் துறையின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகரும், திரைப்பட விநியோகஸ்தருமாகத் தனது தனித்துவமான பங்களிப்பை நல்கியவருமான திரு. கே. ஜே. ராஜன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
திரைப்படத் துறையின் நலன், குறிப்பாகச் சிறு திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் உரிமைகள் மற்றும் தமிழ் சினிமாவின் போக்கு குறித்துத் தொடர்ந்து துணிச்சலுடன் தனது கருத்துகளை வெளிப்படுத்தி வந்தவர் திரு. கே. ஜே. ராஜன் அவர்கள். பல தசாப்தங்களாகத் திரைப்படத் துறையுடன் நெருங்கிப் பயணித்த அவரது பங்களிப்புகள் நினைவுகூரத்தக்கவை. அவரது பங்களிப்பைத் திரைத்துறை என்றும் நினைவில் வைத்திருக்கும்.
திரு. கே. ஜே. ராஜன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும், தமிழ்த்திரைப்படத் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
