தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நகைச்சுவை நடிகர் என்றால் அது வைகைப் புயல் வடிவேலு தான். தனது எதார்த்தமான பாடி லேங்குவேஜுடன் கூடிய நகைச்சுவை நடிப்பால் நம்மை கவர்ந்த வடிவேலு சமீப காலமாக வருடத்திற்கு ஒரு படம் என்று நடித்து வருகிறார். ஹீரோவுடன் நகைச்சுவை நடிகர்கள் இணைந்து கொடுக்கும் நகைச்சுவை காட்சிகள் என்றென்றும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடிக்கும். அப்படி வடிவேலு இயக்குநர் சுந்தர்.சி-உடன் இணைந்து நடித்திருந்த ’தலைநகரம்’ திரைப்படத்தில், இருவரின் நகைச்சுவை காட்சிகள் இன்று வரையிலும் ஒரு மாஸ்டர் பீஸ்.
அதேப் போல 2010-ம் ஆண்டு இருவரது நடிப்புல் வெளியான ’நகரம் மறுபக்கம்’ திரைப்படத்தில் வரக் கூடிய நகைச்சுவை காட்சிகளும் இன்று வரை பிரபலம். சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடித்த அனைத்துப் படங்களுமே நகைச்சுவைக்கு பிரபலம் தான். அப்படியிருக்க கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் இருவரும் சேராமல் இருந்து வந்தனர்.
14 வருடங்கள் கழித்து இருவரும் ’கேங்கர்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஒன்றிணைந்தனர். கடந்த 2024-ம் ஆண்டு வடிவேலுவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியானது. சுந்தர்.சி இயக்கத்தில், அவரது அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்தது. இப்படத்தில் கேத்ரின் தெரசா, முனீஸ்காந்த் உட்பட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
கடந்த மாதம் 24-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. தற்போதும் பல திரையரங்குகளில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இது குறித்து சுந்தர்.சியும், வடிவேலுவும் இணைந்து நகைச்சுவையான வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதன் படி இன்று முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ’கேங்கர்ஸ்’ திரைப்படம் ஒளிப்பரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.