திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த தொழிலதிபரின் மகள் ரிதன்யா வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்டியிருந்தது. 300 சவரன் நகை, ரூ.70லட்சம் மதிப்பிலான கார், ரூ.5கோடி செலவில் பிரம்மாண்டமாக ரிதன்யாவுக்கு திருமணம் நடந்தது. இரண்டரை மாதங்களில் அப்பெண்ணின் கணவர் வீட்டில் 200 சவரன் நகைக்காக வரதட்சனை கொடுமை நடந்துள்ளது.
அத்தோடு உடல் ரீதியாகவும் அவருக்கு தொல்லைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது. இறப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு ஆடியோக்கள் மூலம் தான் அடைந்த வேதனையை கண்ணீரோடு அனுப்பியிருந்தார் ரிதன்யா. அதனடிப்படையில் அவரது கணவர், மாமியார், மாமனார் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரது மறைவுக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அதாவது, ”ரிதன்யாவுக்கு நடந்தது ஒரு சோகமான விஷயம். திருமண வாழ்க்கை சரியில்லை என்றால், வாழ்க்கை அதோடு முடிந்துவிட்டது என நினைக்கக்கூடாது. எல்லோருக்கும் நான் சொல்லிக்கொள்வது அதுதான்.
எனக்கு திருமண வாழ்க்கை சரிபட்டு வராத காரணத்தால் அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். ரிதன்யாவுக்கு மனசு நொந்துபோகுற அளவுக்கு கொடுமை நடந்திருக்கு. அதனால் இந்த முடிவுக்கு வந்துருப்பாங்கன்னு நினைக்கிறேன். ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ரிதன்யா தற்கொலை செய்து கொண்டது குறித்து நான் மீண்டும் மீண்டும் பேசுவதற்கு காரணம் அதேபோல சம்பவங்கள் என்னுடைய வாழ்க்கையிலும் நடந்தது. நான் வெளியே வந்து இன்றும் இந்த உலகத்தில் போராடிக் கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
