சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற வாய்ப்புள்ளதாகத் திரைத்துறை வட்டாரங்களில் புதிய தகவல் தீயாய்ப் பரவி வருகிறது.
சமீபத்தில், மலேசியாவின் பிரபல தொழிலதிபரும், முன்னணித் திரைப்பட விநியோகஸ்தருமான டத்தோ அப்துல் மாலிக் (Malik Streams Corporation), சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் உள்ள பிரம்மாண்ட விளையாட்டு அரங்கில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு, சர்வதேச அளவில் அப்படத்திற்கு மாபெரும் விளம்பரத்தைத் தேடித்தந்தது. அதே ‘ஜனநாயகன்’ மாடலைப் பின்பற்றி, சர்வதேச சந்தையைக் குறிவைத்து ஜெயிலர் 2 இசை வெளியீட்டு விழாவையும் மலேசியாவில் நடத்தச் சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது. மலேசியாவில் ரஜினிகாந்திற்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை ஈர்க்கவும், உலகளாவிய அளவில் படத்திற்கான ஓப்பனிங் பிசினஸை அதிகரிக்கவும் இந்த முடிவு கைகொடுக்கும் எனப் படக்குழு நம்புகிறது.
வரும் ஆயுத பூஜை விடுமுறை தினத்தை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘ஜெயிலர் 2’ படத்திற்கான அதிகாரப்பூர்வ ஆடியோ லான்ச் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

