ஜனநாயகன் படத்திற்கு எதிரான புகாரோ, மறு ஆய்வு தொடர்பான நகலோ தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வாதிட்டுள்ளது.
ஜனவரி 9ம் தேதி ரிலீசாக இருந்த ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததால் படம் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்பட்டது. தணிக்கை சான்றிதழ் தொடர்பான மேல்முறையீட்டு மனுவின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சதீஸ் பராசரன், பிரதீப் ராய் ஆகியோர் ஆஜராகினர். சென்சார் போர்டு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகினர்.
வழக்கு விசாரணையின் போது படத்தை யார், யார் பார்த்தார்கள்? சட்டப்படி படத்தை பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய சென்சார் தரப்பு, படத்தை அட்வைசரி போர்ட் உறுப்பினர்கள் பார்த்ததாகவும், படத்திற்கு எதிராக புகார் அளித்தவர் ஜனநாயகத்தை பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து வாதத்தை தொடர்ந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் முடிவு தொடர்பான நகல் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், சென்சார் தொடர்பான அனைத்தும் வெளிபப்டையாக இருக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், தணிக்கை வாரியம் சொன்னப்படி காட்சிகளை நீக்கிவிட்ட பிறகும், சான்றிதல் தராமல் இழுத்தடிப்பதாகவும், மீண்டும் மீண்டும் ஒரே காட்சியை நீக்க சொல்லுவதில் என்ன கிடைக்க போகிறது என்றும், சான்றிதழ் தராமல் இருப்பதில் சென்சார் போர்டுக்கு என்ன கிடைக்க போகிறது என்றும் படத்தின் தயாரிப்பு குழு தரப்பில் வாதிடப்பட்டது.
