“தன் வினை தன்னை ஒரு நாள் வெச்சு செய்யும்” என்கிற பழமொழி இருக்கிறது அல்லவா?? அது சஸ்பென்ஸ் திரில்லர் வெப் தொடராக இருந்தால் எப்படி இருக்கும்.
கர்மா அந்த மாதிரி ஒரு நீண்ட கொரியன் சீரிஸ். யாருமற்ற ஒரு பாழடைந்த காம்ப்ளக்ஸ் தீப்பிடித்து எரிகிறது. முகம் எல்லாம் எரிந்து கைரேகை அழிந்து யாரென்றே தெரியாத ஒருவனை ஆபத்தான நிலையில் போலீஸ் காப்பாற்றி அவனை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். இன்னொரு பக்கம் ஒரு சிறிய விபத்தில் அதே மருத்துவமனையில் இருக்கும் தன் தந்தையை காண வரும் ஒருவன் தன் தந்தையை விபத்துக்குள்ளாக்குன காரோட்டியிடம் பேரம் பேசி பணம் வாங்கிக்கொள்கிறான்.
அது போலவே காதலர்கள் டேட்டிங் போக அதே இரவு அந்த பெண்ணிற்கு அவசரமாக போன் வர ” நான் குடித்திருக்கிறேன் வர முடியாது என்று சொல்லும் காதலனின் மனதை மாற்றி அந்த இரவில் அவர்கள் பயணமாக எதேச்சையாக ஒருவர் காரில் வந்து விழுகிறார். அந்த பிணத்தை எடுத்து புதைக்க போகும் போது பிளாட்பாரத்தில் படுத்துக்கொண்டுருந்தவன் அதை பார்க்க, அவனை அதட்டி மிரட்டி பணம் கொடுத்து அவனை கூட்டு சேர்த்து அந்த பிணத்தை புதைக்கிறார்கள்.
அதற்கு பின் நடப்பவைகள் தான் முதல் பாராவில் நான் சொன்ன அந்த பழமொழி..
ஒரு குற்றத்திற்கு காரணமானவன் வேறொரு காரணத்திற்கு கொல்லப்படுவதும். எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை “நான் அவனே இல்லை” என்று சொன்னாலும் அவன் கொல்லப்படுவதற்கான காரணம் மிக சிறப்பாகவே எழுதப்பட்டு இருக்கிறது.
குற்றவாளிகள் வெவ்வேறு காரணங்களுக்கு ஒன்று சேர்வதும், இயல்பாகவே ஒருவரை ஒருவர் ஏமாற்ற நினைப்பதும், அந்த காரணத்திற்காகவே அவர்கள் இறப்பதும்.., நீதி கதையாக தெரிந்தாலும், நம் கவனத்தை எங்கும் திசை திருப்பாத திரைக்கதை.
பொதுவாக கொரியன் சினிமாவாகட்டும். வெப் சீரிஸ் ஆகட்டும். அது முழுக்க முழுக்க இந்திய நிலப்பரப்புக்கு ஒத்துபோவது போல இருக்கிறது .இந்த “கர்மா” வெப் சீரிஸும் இதில் அடக்கம்..
நெட் பிளிக்ஸ்-ல் இருக்கிறது. தமிழிலும் பார்க்கலாம்..
Vijis Palanichamy