8 மணி நேரம் மட்டுமே வேலை என்ற இந்தி நடிகை தீபிகா படுகோன் கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு தீபகா படுகோன், படப்பிடிப்பில் 8 மணி நேரம் மட்டுமே பணிபுரிவேன் என்று கூறியது இணையத்தில் தகவலாக வெளியானது. இது குறித்த விவாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. அவருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

தற்போது தீபிகா படுகோன் கருத்து குறித்து கீர்த்தி சுரேஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “காலை 9மணி முதல், மாலை 6 மணி வரை படப்பிடிப்பிலும், காலை 9 மணி முதல் அடுத்த நாள் காலை 2 மணி வரை படப்பிடிப்பு என இரண்டிலும் கலந்து கொண்டுள்ளேன். காலை 9 மணிக்கு படப்பிடிப்பு என்றால், 6 மணிக்கு எல்லாம் எழுந்து தயாராகி படப்பிடிப்பு தளத்துக்கு சென்று மேக்கப் போட்டு தயாராக இருக்க வேண்டும்.

சரியான நேரத்தில் படப்பிடிப்பு தொடங்கி, மாலை 6 மணிக்கு முடிந்துவிட்டால் அங்கிருந்து ஹோட்டலுக்கு வந்து உடற்பயிற்சி செய்துவிட்டு, குளித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு தூங்க 11 மணி ஆகிவிடும். இப்படியான சூழலில் 6-7 மணி நேரம் மட்டுமே தூங்க முடியும். ஒரு நடிகையாக சரியான தூக்கத்தை முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் உடல்நிலை மிகவும் முக்கியம். எனவே, குறைந்த நேர வேலை என்பதையே விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தீபிகா படுகோன் கருத்துக்கு கீர்த்தி சுரேஷ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நாயகியை மையப்படுத்திய படங்களுக்கான வரவேற்பு குறித்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷ், “நமது திரையுலகம் நாயகர்களை மையமாக கொண்டது என்பது தான் உண்மை. பார்வையாளர்களின் கருத்தும் முக்கியமானது.

உங்களுக்கு பிடித்த நாயகன், நாயகி படங்கள் ஒரே நாளில் வெளியானால் பார்வையாளர்கள் நிச்சயமாக நாயகனை மையப்படுத்திய படத்தைத் தான் பார்ப்பார்கள். நாயகியை மையப்படுத்திய படம் நன்றாக இருந்தால் மட்டுமே பார்ப்பார்கள். நாயகியை மையப்படுத்திய படங்களுக்கு பெரியளவில் ஓப்பனிங் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version