2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க A.I. தொழில்நுட்பத்தை பயன்படுத்த திமுக தேர்தல் அறிக்கை குழு முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் அரசியல் கட்சிகள், கவர்ச்சிகரமான திட்டங்களைக் கொண்ட தேர்தல் அறிக்கையை தயாரித்து வெளியிடுவது வழக்கம். இதற்காக குழுக்களை அரசியல் கட்சிகள் அமைக்கும்.
அதன்படி, திமுகவில் கனிமொழி எம்பி தலைமையில் அக்கட்சி குழு அமைத்துள்ளது. அக்குழுவினர் தேர்தல் அறிக்கையை தயாரிக்க பொதுமக்களின் கருத்துகளை கேட்பதற்காக A.I. தொழில்நுட்பத்தில் செயல்படும் பிரத்யேக இணையதளத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த இணையதளத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள், விருப்பங்களை பதிவிடலாம். அதை பரிசீலித்து, திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த இணையதளத்தை விரைவில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தேர்தல் அறிக்கையை தயாரிக்க A.I. தொழில்நுட்பத்தை திமுக பயன்படுத்துவது இதுவே முதல்முறையாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் 505 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில் சில வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
ஆதலால் இந்த முறை, தேர்தல் அறிக்கை தயாரிப்பின்போது மிகவும் கவனமுடன் இருப்பதென்று, திமுக தேர்தல் அறிக்கை குழு தீர்மானித்துள்ளது.

