சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் கூலி. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்துள்ளார். இதன் முதல் பாடல் சிக்கிடுசிக்கா ஏற்கனவே வெளியாகி அதிரிபுதிரி ஹிட் அடித்தது.
சமீபத்தில் கூட அதன் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியானது. அதில் அனிருத், நடன இயக்குநர் சாண்டி, இயக்குநரும் நடிகருமான டி.ஆர்.ராஜேந்தர் ஆகியோர் ஆடி அதகளம் செய்திருந்தனர்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு ஜுலை 9-ந் தேதி மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி மோனிகா என்று தொடங்கும் பாடலின் 20 நொடிகள் வீடியோ சன் பிக்சர்ஸ்-ன் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியானது.
அதிரடியான இசையோடு அட்டகாசமான நடனத்தோடு வெளிவந்திருக்கும் இந்த பாடல் ரஜினி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்த பாடலில் நடிகை பூஜா ஹெக்டே சிவப்பு நிற ஆடை அணிந்து ஆடும் ஓரிரு நொடிகள் நடனமே பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்தி உள்ளது.
ரஜினி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்த கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி வெளியாக உள்ளது.