தெலுங்கு திரையரங்கில் தற்பொழுது அல்லு அர்ஜுன் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. அவரது புஷ்பா 2 திரைப்படம் உலக அளவில் 1700 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
புஷ்பா பாகம் இரண்டைத் தொடர்ந்து தற்பொழுது அட்லீ இயக்கத்தில் தீபிகா படுகோன் உடன் இணைந்து ஒரு பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கருணாநிதி மாறன் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படம் முடிந்த பின்னர் அல்லு அர்ஜுன் புஷ்பா பாகம் 3 திரைப்படத்தில் நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்பொழுது மற்றொரு புதிய சுவாரசிய தகவல் கிடைத்துள்ளது.
தமிழ் திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூலி திரைப்படத்தை தொடர்ந்து கைதி 2 திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அது குறித்து எந்த விதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய கனவு திரைப்படமான இரும்புக்கை மாயாவி திரைப்படத்தை அல்லு அர்ஜூனை வைத்து இயக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரும்புக்கை மாயாவி என்பது காமிக்ஸ் புத்தகத்திலிருந்து கிடைத்த கற்பனையின் வாயிலாக எழுதிய கதை என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார். அந்த திரைப்படத்தை முதலில் சூர்யாவை வைத்து இயக்குவதாக இருந்தது பின்னர் அந்த கதை பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு சென்றது.
அமீர்கான் இத்திரைப்படத்தில் நடிக்கப் போவதில்லை என்று தெரிந்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இந்த கதையை அல்லு அர்ஜுனிடம் தெரிவித்திருக்கிறார். இத்திரைப்படத்தை தயாரிக்க மித்ரி மூவி மேக்கர்ஸ் தயாராக உள்ளது. கதையைக் கேட்டுள்ள அல்லு அர்ஜுன் சரி என்று சொல்லிவிட்டால், மித்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க இருக்கும் படம் இதுவாக அமையும். அல்லு அர்ஜூன் என்ன சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இரும்பு கை மாயாவி என்பது ஒரு சூப்பர் நேச்சுரல் பவர் கொண்ட ஹீரோவின் கதை. ஒரு விபத்தில் தனது வலது கையை ஹீரோ இழந்து விடுவார். பின்பு ஒரு செயற்கை கையை வைத்து நிலைமையை சரி செய்ய முயலும் வேலையில் மற்றொரு விபத்தின் மூலம் அவருக்கு சூப்பர் பவர் கிடைக்கும். அதை வைத்து அவர் என்ன செய்கிறார் என்பது தான் மீதிக்கதை.
