நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் சூரி, விடுதலை பட வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து ஹீரோவாக களமிறங்கி அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். ’விடுதலை ஒன்று மற்றும் இரண்டாம்’ பாகங்களில் சூரியின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான ’கருடன், கொட்டுக்காளி’ படங்களும் குறிப்பிட்ட தகுந்த வெற்றியை அடைந்தது. அதை தொடர்ந்து கதையின் நாயகனாகவே நடித்து வருகிறார் சூரி.
அந்த வகையில், விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ”மாமன்” என்ற படத்தில் கமிட்டானார் சூரி. ’கருடன்’ திரைப்படத்தை தயாரித்திருந்த லார்க் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தையும் தயாரித்தது. சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமியும் தங்கையாக நடிகை ஸ்வாசிகாவும் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு ராஜ்கிரன், விஜி சந்திரசேகர் உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் நாளை (16.05.2025) வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமத்தை ஜீ5 நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் முழு ஆல்பம் வெளியாகியுள்ளது. ஒவ்வொருவரும் எந்தெந்த கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பதை ஒரு வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது.