சிறந்த நடிப்பிற்காக கேரள அரசின் விருது வென்ற மலையாள நடிகர் அகில் விஸ்வநாதன் (30), வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘சோழா’ என்கிற படத்தில் நாயகனாக நடித்திருந்தார் அகில். அதே படத்தில் பிரபல நடிகர் ஜோஜு ஜார்ஜ் வில்லனாக நடிக்க, நாயகி நிமிஷா சஜயனை காதலிக்கும் நாயகனாக அகில் நடித்திருந்தார். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘சோழா’ படத்தில் அகிலின் நடிப்பும் பாராட்டப்பட்டது.
தொடர்ந்து ‘ஆபரேஷன் ஜாவா’ உள்பட சில படங்களில் நடித்திருந்தார். தற்போது ‘OTT’ என்கிற படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் ஆகியிருந்த நிலையில் தான் அகில் விஸ்வநாதன் வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரண்டு தினங்கள் முன்பு இந்த சோக சம்பவம் நடந்திருக்கிறது. திருச்சூரில் உள்ள மத்தத்தூரில் வசித்து வந்த அகில் விஸ்வநாதன் சடலமாக மீட்கப்பட்டது மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் தான் அகிலின் தந்தை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த துயரத்துக்கு மத்தியில் அகிலின் தற்கொலை செய்தி வெளிவந்துள்ளது. குழந்தையாக இருந்தபோதே தனது சகோதரருடன் இணைந்து நடித்த ‘மங்காண்டி’ என்ற தொலைக்காட்சி தொடருக்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான மாநில அரசின் விருதை வென்றவர் அகில். நடிப்பில் ஆர்வம் மிகுந்த இவர் இளைஞராக ஒரு மொபைல் போன் கடையில் பணிபுரிந்தபோது அவருக்கு ‘சோழா’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
‘சோழா’ படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றாலும் அகிலுக்கு போதிய வரவேற்பை கொடுக்கவில்லை. வறுமைக்கு மத்தியில் சினிமா கனவை துரத்தி வந்த நிலையில் அவர் தற்கொலை செய்தி வந்துள்ளதாக ‘சோழா’ பட இயக்குநர் சனல் குமார் சசிதரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சனல் குமார் சசிதரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “சினிமாவில் நடிக்க வறுமையை எதிர்த்துப் போராடினார். ‘சோழா’ படத்தில் அவரது நடிப்பு அவருக்கு நிறைய வரவேற்பை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. அகில் தற்கொலை செய்து கொள்வார் என்று என்னால் நம்ப முடியவில்லை. அவர் இறப்பு செய்தியை கேட்டு மனம் உடைந்து போனேன்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
